தமிழ்நாடு

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு 27-க்கு ஒத்திவைப்பு

DIN

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை வரும் அக். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, பேரவைத் தலைவர், செயலர் பதிலளிக்க மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக திமுக கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக கடந்த பிப். 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 
கடந்த ஆக. 22-ஆம் தேதி முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி டிடிவி.தினகரன் ஆதரவாளர்களான தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதற்காக 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
பேரவைத் தலைவரின் பாரபட்சமான நடவடிக்கையால் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தனது ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்தை தற்போது துணை முதல்வராகவும், கே.பாண்டியராஜனை அமைச்சராகவும் நியமித்துள்ளார்.
எனவே கடந்த பிப்.18-ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத்தலைவருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கில் பேரவைத் தலைவர், பேரவைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இம்மனு, வியாழக்கிழமை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜரானார்.
அப்போது சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், இந்த வழக்கில் விரிவான பதில்மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். எனவே, வழக்கின் விசாரணையை வரும் நவ. 2-ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றார். 
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் கபில் சிபல், பதிலளிக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், விரைவாக பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். 
இதனையடுத்து நீதிபதி, இந்த மனு குறித்து பதிலளிக்க பேரவைத் தலைவர், பேரவைச் செயலருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT