தமிழ்நாடு

திருச்சி முன்னாள் துணை மேயருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

DIN

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய வழக்கில் திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி சங்கிலியாண்டபுரம் தெரசம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மரியம்பிச்சை. இவரது மகன் ஆசிக் மீரா. இவர், மாநகராட்சி முன்னாள் துணை மேயர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த துர்கேஸ்வரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு துர்கேஸ்வரியை கைவிட்ட ஆசிக் மீரா, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன.
இதனிடையே துர்கேஸ்வரியிடம், 2-ஆவது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மீண்டும் பழகியுள்ளார். இதனால் துர்கேஸ்வரி கர்ப்பமானார். ஆனாலும், ஆசிக் மீரா, அவரை திருமணம் செய்து கொள்ளாமல் கருவை கலைக்க கூறியுள்ளார். ஆனால் துர்கேஸ்வரி, கருவை கலைக்கவில்லையாம். இதையடுத்து ஆசிக் மீரா, துர்கேஸ்வரியிடம் பழகுவதை நிறுத்திவிட்டார். இதையடுத்து துர்கேஸ்வரிக்கு 2014 மே மாதம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து துர்கேஸ்வரி, பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், ஆசிக் மீரா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, குழந்தைக்கு தாயாக்கி விட்டு, திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டார். இதைக் கேட்டால் அவரும், அவரது நண்பர்களும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக புகார் அளித்தார்.
தொடர்ந்து, அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தன்னை ஏமாற்றிய ஆசிக் மீரா மீது வழக்குப் பதியக் கோரியும் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, பொன்மலை அனைத்து மகளிர் போலீஸார், ஆசிக் மீரா, இவரது மனைவியின் தாயும், மரியம்பிச்சையின் தங்கையுமான மைமூன் பேகம் (50), ஆசிக் மீராவின் நண்பர்களான வி.எஸ்.டி. பாபு, சரவணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஆசிக் மீரா, துணை மேயர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெசிந்தா மார்டீன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு வழக்குரைஞராக கிருஷ்ணவேணி ஆஜரானார்.
விசாரணைக்கு பின் நீதிபதி அளித்த தீர்ப்பில், ஆசிக் மீராவுக்கு கருவை கலைத்த (313) குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஏமாற்றிய (417) குற்றத்துக்காக 1 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரத்துக்கு (376) 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மோசடி திருமணத்துக்கு (496) 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் (506-1) விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் என 5 சட்டப்பிரிவுகளின் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதே போல, மைமூன் பேகத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த ஆசிக் மீராவின் நண்பர் விஎஸ்டி பாபு, சரவணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT