தமிழ்நாடு

ஆயுதபூஜை தொடர் விடுமுறை ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு 

DIN

ஆயுதபூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, அடுத்த வாரம் பயணிகளின் கூட்டநெரிசல் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
வரும் 29 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆயுதபூஜை, 30 -ஆம் தேதி (சனிக்கிழமை) விஜயதசமி, அக்டோபர் 1 - ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2 - ஆம் தேதி (திங்கள்கிழமை) காந்தி ஜெயந்தி என தொடந்து 4 நாள்கள் அரசு விடுமுறையாக உள்ளது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் அக்டோபர் 28 -ஆம் தேதியே, அதாவது வியாழக்கிழமை இரவே அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்துவிட்டனர்.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்களில் உள்ள சாதாரண படுக்கை வசதி பெட்டிகள், ஏசி மூன்றாம் வகுப்பு, ஏசி இரண்டாம் வகுப்பு ஆகியவை நிரம்பிவிட்டன. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் காத்திருப்பு பட்டியல் 300 -ஐ தொட்டுவிட்டது. கேரள மாநிலம் செல்லும் ரயில்களிலும், கோவை செல்லும் சேரன், நீலகிரி விரைவு ரயில்களிலும் இதே நிலைதான். எனவே, ஆயுத பூஜையையொட்டி சென்னை சென்ட்ரல், எழும்பூர், அரக்கோணம்,
தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட அதிக அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிது.
தீவிர பாதுகாப்பு: இதையடுத்து, பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை என, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 440 பேர், எழும்பூரில் 235 பேர், தாம்பரத்தில் 215 பேர் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையங்களுக்கு வரும் வாகனங்கள், நுழைவு வாயிலில் 'மெட்டல் டிடெக்டர்' மூலம் சோதனை செய்யப்படவுள்ளன. ரயில் நிலையத்தின் முகப்பு வாயில் பகுதியில், 'மெட்டல் டிடெக்டர்' மற்றும் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்படும் பயணிகளின் உடைமைகளுக்கு, அடையாள, 'ஸ்டிக்கர்' ஒட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ரயில் பெட்டிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர், லூயிஸ் அமுதன் கூறியதாவது: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுத பூஜை விடுமுறைக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். மேலும், இந்த விடுமுறை நாள்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் மேற்கொள்வோரை ஒழுங்குப்படுத்தும் விதமாக, முன்பதிவு செய்யாத பயணிகள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு பெட்டியில் அனுமதிக்கப்படுவர். மேலும் மகளிர் பாதுகாப்புப் படையினர் மகளிர் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் தீவிர சோதனையில் ஈடுபடுவர்.
இதுபோன்ற நேரங்களில் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க, ரயில் புறப்படுவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகவே ரயில் நிலையத்துக்கு பயணிகள் வருவது நல்லது. மேலும் ரயில் நிலையத்தில், ரயிலில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கிடந்தாலோ, சந்தேகிக்கும் வகையில் யாரும் தென்பட்டாலோ, ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் லூயிஸ் அமுதன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT