தமிழ்நாடு

தமிழகத்தில் 20 ஆண்டுகளில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காது: வேளாண் பல்கலைக்கழக நீரியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் எச்சரிக்கை

DIN

தமிழகத்தில் நீர்நிலை பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் உண்டு என்று, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நீரியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் பி.ஜே. பாண்டியன் எச்சரித்துள்ளார்.

மதுரையில் தானம் அறக்கட்டளை சார்பில், வளம் குன்றா மீள்திறன் கூடல் அரங்கு-2017  நிகழ்ச்சி தமுக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  4 நாள்கள் நடைபெற உள்ள இந் நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கு, தானம் அறக்கட்டளை நிர்வாகி பி.டி. பங்கேரா தலைமை வகித்தார். முன்னதாக, டாடா-தானம் அறக்கட்டளை இயக்குநர் ஏ. குருநாதன் வரவேற்றார்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நீரியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் பி.ஜே. பாண்டியன் பேசியதாவது:
தமிழகத்தில் 17 ஆறுகள், 40 ஆயிரம் ஏரி,  குளம் உள்ளிட்ட நீர்நிலைகள், 35 லட்சத்துக்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக இவற்றை  பராமரிக்காததன் விளைவாக நீர்நிலைகளில் தண்ணீர் கொள்ளளவு 50 சதவீதம் குறைந்துள்ளது. 35 லட்சம் கிணறுகள் இருந்தாலும் அதில் தண்ணீர் இல்லை.

இதற்குக் காரணம் நீர்நிலைகளில் தொடர்ந்து தண்ணீரை உறிஞ்சிய நாம், அதற்கு தண்ணீர் வரத்து, மறுஊட்டம் பற்றி யோசிக்கவில்லை. இதுவே வறட்சிக்கும் காரணம்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் அரசு விழித்துக்கொண்டு தற்போது குடிமராமத்து முறை மூலம் நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி உள்ளது.

 தற்போதுள்ள சூழலில் வறட்சியில் இருந்து மீளவேண்டுமானால், நீர்நிலைகள், வரத்துக் கால்வாய்கள் பற்றிய விழிப்புணர்வு கிராம மக்களுக்கு அதிகம் தேவை. தற்போது நமக்கு கிடைக்கும் தண்ணீரில் 80 சதவீதம் வேளாண்மைத் துறைக்கு வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, தண்ணீர் சிக்கன வேளாண்மையை விவசாயிகள் பயன்படுத்தவேண்டும்.

தண்ணீரை குறைவாகப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கும் சொட்டு நீர்ப்பாசன முறையை கையாளலாம். மழையை மட்டுமே நம்பி உள்ள மானாவாரி மகசூல் முறையில் விவசாயிகள் மழை நீர் சேகரிப்பை கையாள வேண்டும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ்:  மதுரையில் வைகை நதியை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆற்றின் எல்லைகளை வரையறுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துவது. குப்பைகளை கொட்டுவதை தடுப்பது. கல்லூரி, பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி ஆற்றை சுத்தம் செய்வது. ஆற்றின் கரைகளில் மரம் நட்டு பாதுகாப்பது. மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  வைகையை பாதுகாக்கும் பணியில் மகளிர் சுய உதவிக்குழுவினரும் இணைய வேண்டும்.

பல்லவன் கிராம வங்கித் தலைவர் எஸ். சுரேஷ்குமார்:  3 கிராம வங்கிகளை இணைத்து பல்லவன் கிராம வங்கி உருவாக்கப்பட்டது.

முற்றிலும் கிராமப்புற மக்களுக்கான சேவைகளை பல்லவன் வங்கி வழங்கி வருகிறது. கிராமப்புற மக்களுக்கு கடன் உதவி, வேளாண் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. ரூ.450 கோடியில் தொடங்கப்பட்ட வங்கியின் ஆண்டு வணிகம் தற்போது ரூ.7,500 கோடியாக உள்ளது.

நாட்டில் வங்கித் துறையில் வராக்கடன் தற்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆனால், பல்லவன் வங்கியின் வராக்கடன் 2 சதவீதம் மட்டுமே உள்ளது. ஏழை மக்களுக்கு கடன் கொடுத்தால் அதை நேர்மையாக திருப்பிச் செலுத்துவார்கள் என்பதற்கு பல்லவன் வங்கி உதாரணமாக உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், ஆயுள் காப்பீட்டு நிறுவன மண்டல முதுநிலை மேலாளர் பி.ஜே. நிக்கல்சன்,  இயற்கை வளங்கள் மேலாண்மை நிறுவன இயக்குநர் ராஜீவ் அகால், நெதர்லாந்து நாட்டை ச் சேர்ந்த குறுநிதி நிபுணர் அன்னெட் ஹூட்காமர், தானம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாசிமலை உள்ளிட்ட பலர் பேசினர்.

கூடல் அரங்கில், தமிழகம் முழுவதும் மற்றும் ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT