தமிழ்நாடு

முதல்வர் ஜெயலலிதா கைரேகை விவகாரம்: தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் அக். 6-இல் ஆஜராக உத்தரவு

DIN

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளரையும், கட்சி சின்னத்தையும் அங்கீகரித்து சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக இந்திய தேர்தல்ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் வரும் அக். 6-இல் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு, கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி ,திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், 'ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸை வேட்பாளராக அங்கீகரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி தனது இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவணப் படிவத்தில் ஜெயலலிதா பதிவு செய்து கொடுத்துள்ளார். அதனை சென்னை அரசு பொது மருத்துவமனையின் மருத்துவரான பாலாஜி சான்றொப்பம் அளித்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளார். இந்தப் படிவத்தில் சுயநினைவோடுதான் அவர் கைரேகையைப் பதிவு செய்தாரா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே உரிய மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
மேலும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் இந்த ஆவணம் மிக முக்கியமானது என்பதால், இந்த கைரேகையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்தப் படிவத்தை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரி கூடுதல் மனுவையும் டாக்டர்சரவணன் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் மற்றும் கட்சி சின்னத்தை அங்கீகரித்து படிவத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதிவு செய்து கொடுத்துள்ள கைரேகை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் வரும் அக். 6 ஆம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT