முகப்பு
தமிழ்நாடு

குடிநீர் கவலை இவர்களுக்கு இல்லை: முன்னுதாரணமாக மாறிய கிராமம்

தமிழக மக்கள் குடிநீர் பிரச்னையை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், சிவகாசி அருகே உள்ள கள்ளமநாயக்கன்பட்டி கிராம மக்கள் மட்டும் அந்த கவலையே இல்லாமல் இருக்கிறார்கள்.

Updated On : 2 ஏப்ரல், 2018 at 4:52 PM
பகிர்:


விருதுநகர்: தமிழக மக்கள் குடிநீர் பிரச்னையை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், சிவகாசி அருகே உள்ள கள்ளமநாயக்கன்பட்டி கிராம மக்கள் மட்டும் அந்த கவலையே இல்லாமல் இருக்கிறார்கள்.

காரணம், அந்த கிராமத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தினந்தோறும் 20 லிட்டர் தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மட்டும் எப்படி குடிநீர் உறுதியானது. தமிழக அரசு அப்படி என்ன திட்டத்தைத்தான் இவர்களுக்கு செய்துள்ளது என்று எல்லோரும் ஒரே நேரத்தில் குரல் எழுப்பலாம். குடிநீருக்காக அரசை எதிர்பார்க்காமல், தன் கையே தனக்கு உதவி என்ற பழமொழியை நினைவூட்டும் வகையில் பல பகுதிகளுக்கும் இந்த கிராம மக்கள் ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளனர்.

Advertisement

அதாவது, சிவகாசி தாலுகாவைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமம் கள்ளமநாயக்கன்பட்டி. 600 குடும்பங்கள் வாழ்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக கடுமையான குடிநீர் பஞ்சத்தை சந்தித்து, அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீருக்காக அலைந்தவர்கள் இவர்கள்.

வெறும் குடிநீருக்காகவே அலையாமல், தங்களது பிரச்னையை தாங்களே தீர்த்துக் கொள்ளும் வழியையும் தேடினார்கள். அப்போது கிடைத்தது தான் இந்த புதிய வழி.

அதற்காக அவர்கள் அரசின் உதவியை நாடவில்லை. 600 குடும்பங்களும் தங்களால் முடிந்த அளவுக்கு தொகையைத் திரட்டினார்கள். குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை சொந்தச் செலவில் அமைத்தார்கள். தற்போது, கோடைக் காலம் என்பதால், அனைத்துக் குடும்பத்துக்கும் ஒவ்வொரு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதனை ஸ்கேன் செய்து, தினந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 20 லிட்டர் குடிநீர் வீதம் பெற்றுக் கொள்ளலாம்.

கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த குடிநீர் ஆலை செயல்படும். ஒவ்வொரு குடும்பமும் தினந்தோறும் 20 லிட்டர் குடிநீரை இலவசமாகப் பெற்று வருகிறோம். எங்களது  குடிநீர் பிரச்னை அனைத்தும் தீர்ந்துவிட்டது என்கிறார்கள் கிராம மக்கள் மகிழ்ச்சியோடு.

அக்கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை, மின்சார அலுவலகம் என அனைத்துக்கும் இந்த ஆலையில் இருந்தே இலவச குடிநீர் வழங்கப்படுகிறது.

தங்களது தேவைக்காக போராட்டம், மறியல் போன்றவற்றில் ஈடுபடாமல் ஒரு கிராமமே ஒன்று திரண்டு புதிய தீர்வை கண்டறிந்திருப்பது வரவேற்கத்தக்கதாகவே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.