தமிழ்நாடு

உயர்கல்வித் துறையில் சராசரியை விட அதிக வளர்ச்சி: அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்

DIN

தமிழக அரசின் உயர் கல்வித் துறையானது, இந்தியாவின் சராசரி வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை அடைந்து வருவதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 39 மாணவர்களுக்கும், 10 ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ்களை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் வழங்கினார். பின்னர் அவர் ஆற்றிய சிறப்புரை:
உயர்கல்வித் துறையில் தமிழக அரசு பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது. இந்தத் துறையில் இந்தியாவின் சராசரி வளர்ச்சியை விட கூடுதலான வளர்ச்சியை அடைந்து வரும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகின்றது. 
இந்த விழா மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் எம்ஜிஆரின் பன்முக ஆளுமையை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள உதவும். 
மக்கள் நலனை தனது உயிராகக் கொண்டு செயலாற்றிய எம்ஜிஆரின் ஆளுமையை நாம் அறிவதோடு, அவர் காட்டிய தூய வழியில் பயணிக்க வேண்டும். இதற்கான உறுதியேற்கும் விழாவாக இந்த விழா அமைய வேண்டும் என்றார் அமைச்சர்.
விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:
இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த நீலம் சஞ்சீவி ரெட்டி, தமிழக ஆளுநராக இருந்த பிரபுதாஸ் பட்வாரி ஆகியோர் பங்கேற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக பொன் விழாவில் சிறப்புரையாற்றியவர் எம்ஜிஆர். மேலும், 1979-ஆம் ஆண்டில் நடைபெற்ற தொலைதூரக் கல்வி இயக்ககத் தொடக்க விழா, நிர்வாகக் கட்டட அடிக்கல் நாட்டு விழாக்களில் பங்கேற்ற பெருமையும் அவருக்கு உண்டு என்றார். 
விழாவில், மாவட்ட ஆட்சியர் வே.ப. தண்டபாணி, பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தமிழியல் துறைத் தலைவர் அரங்க.பாரி அறிமுக உரை ஆற்றினார். விழாவில் மா.சந்திரகாசி எம்.பி., எம்எல்ஏக்கள் கே.ஏ.பாண்டியன், நாக.முருகுமாறன், சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழா மலரை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட, முதல் பிரதியை அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் நன்றி கூறினார். 
விழாவில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் எம்.உமாமகேஸ்வரன், முன்னாள் அமைச்சர்கள் கே.கலைமணி, செல்வி.ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ எம்.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் வரவேற்றார்.
பல்கலை. ஊழியர்களுக்கு புதிய ஊதியம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஆசிரியர்கள், ஊழியர்கள் 6 ஆயிரம் பேர் மட்டுமே தேவை. ஆனால், 12,500 பேர் இருந்தனர். இவர்களில் 3,500 பேரை அரசு பணி மாறுதல் செய்துள்ளது. 
பல்கலைக்கழகத்தில் தனி அலுவலர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் நிர்ணயம் செய்து, பணிமாறுதலுக்கு ஒப்புதல் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் ஒப்புதல் கடிதம் வழங்கவில்லை. இதுதொடர்பாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 15 நாள்கள் அவகாசம் போதுமானது. இது நாள் வரை அவர்கள் பெற்ற சம்பளம் கூட பிடித்தம் செய்யப்பட மாட்டாது என உறுதி கொடுத்துள்ளோம்.
பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தேர்வு குறித்து ஆளுநர்தான் முடிவு செய்வார். இதில் தமிழக அரசின் தலையீடு கிடையாது என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT