தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இம்மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆடி, தை மாத அமாவாசை திருவிழாக்கள், குருபூஜை ஆகியவை சிறப்பாக நடைபெறும்.
நிகழாண்டு, ஆடி அமாவாசைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, மூலஸ்தான முன்மண்டபத்தில் வெள்ளிக் கொடிக்கம்பத்தில் கோயில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டியன் நாடார் கொடியேற்றினார். பின்னர், சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் கேடய சப்பரத்தில் சேர்மத் திருக்கோலத்தில் சுவாமி பவனி வருதல் நடைபெற்றது.
தொடர்ந்து, 9ஆம் திருநாளான இம்மாதம் 10ஆம் தேதி வரை காலை சேர்ம விநாயகர் உலாவும், இரவில் சுவாமி பல்வேறு திருக்கோலங்களில் பல்வேறு வாகனங்களில் பவனி வருதலும் நடைபெறும். முக்கியத் திருநாளான ஆடி அமாவாசை நாளில் (ஆகஸ்ட் 11) பகல் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் எழுந்தருளி பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறும்.
மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சி, இரவு 10 மணிக்கு 1ஆம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.