தமிழ்நாடு

மாணவர்களின் சமூகப் பொறுப்பின்மை: உயர் நீதிமன்றம் வேதனை

DIN

மாணவர்கள் சமூகப் பொறுப்பின்மை, சகிப்புத் தன்மை இல்லாமை, மூத்தோர்களை மதியாமை உள்ளிட்ட காரணங்களால் தங்களின் எதிர்காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பதாக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 
வழக்கு என்ன?: காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் 7 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இந்த 7 மாணவர்களில் ஒரு மாணவரின் தாயார் பள்ளி நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரியதுடன், பிளஸ் 1 தேர்வு முடிந்த பின்னர் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து அந்த மாணவனைத் தேர்வெழுத பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியது. அந்த மாணவனின் தந்தை தன் மகன் மீண்டும் அதே பள்ளியில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்தது.
பள்ளிக் கல்வித் துறை உத்தரவு: இதனையடுத்து பள்ளி நிர்வாகம் குறித்து பள்ளிக் கல்வித்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்ட மாணவன் தவிர 7 மாணவர்களையும் மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.
உத்தரவை ரத்து செய்யக் கோரி...: இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பிலும், பள்ளியில் மீண்டும் சேர்க்கக் கோரி தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட மாணவனின் தந்தை சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி உத்தரவு: இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மாணவர் செய்தத் தவறுக்கு அவரது தாயார் பொறுப்பேற்று மன்னிப்பு கோரி உள்ளார். ஆனால், பள்ளியில் தகராறில் ஈடுபடும் மாணவர்களை மீண்டும் அதே பள்ளியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டால் அது தவறான வழிகாட்டுதல் ஆகிவிடும்.
எனவே, இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்ட மாணவருக்கு பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழை வழங்கி விட்டது. ஆனால், பள்ளியில் நடந்த பிரச்னையின் தீவிரத்தை முழுமையாக விசாரிக்காமல் மீண்டும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக பொறுப்பின்மை, சகிப்புத் தன்மை இல்லாமை, மூத்தோர்களை மதியாமை உள்ளிட்ட காரணங்களால் தங்களின் எதிர்காலத்தை மாணவர்களில் பெரும்பாலானோர் வீணடிக்கின்றனர். குடும்பத்தில் இருப்பவர்களும், ஆசிரியர்களும்கூட மாணவர்களுக்கு நல்ல பண்புகளை கற்றுக் கொடுப்பது இல்லை எனக் கூறி மாணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT