தமிழ்நாடு

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் 30-இல் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

DIN


பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக சன் டிவிக்குப் பயன்படுத்தி அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் வரும் ஆக.30-ஆம் தேதி ஆஜராக சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு என்ன?: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
வழக்கிலிருந்து விடுவிப்பு: இந்த மோசடி தொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் கௌதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சிபிஐ சார்பில் மேல் முறையீட்டு மனு: இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. 
முகாந்திரம் உள்ளதால்...இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து மீண்டும் விசாரிக்க கடந்த ஜூலை 25-ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், வழக்கின் தொடக்க நிலையிலேயே தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடர முகாந்திரம் உள்ளது.
அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு: கடந்த 2004 -ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2007-ஆம் ஆண்டு மே மாதம் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த போது, பொது ஊழியர் என்ற நிலையை மீறி இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுடன் சேர்ந்து குற்றச் சதியில் ஈடுபட்டு, தன்னுடைய சென்னை மற்றும் தில்லி இல்லங்களுக்கு 764 தொலைபேசி எண்களைப் பெற்றுள்ளார். விதிமுறைகளை மீறிய இந்த செயலால் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவில் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி: இந்த உத்தரவை எதிர்த்து மாறன் சகோதரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆக.30- இல் குற்றச்சாட்டு பதிவு: இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் நேரில் ஆஜராகவும், குற்றச்சாட்டுப் பதிவுக்காகவும் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிபதி ஆர்.வசந்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் சார்பில் வழக்கில் இருந்து ஒருநாள் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும், குற்றச்சாட்டு பதிவை ஒத்திவைக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும், அன்றைய தினம் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT