மதுரை: அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் வரும் 13-ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இந்நிலையில் மருத்துவர்களின் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை அவசர வழக்காக கருதி இன்றே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு முன் முறையிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், 'அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியிருக்கும்போது இது தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ' என்று கேள்வி எழுப்பி விட்டு, இது தொடர்பாக வெள்ளியன்று அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.