தமிழ்நாடு

அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கம்பத்தில் திமுக கொடி: மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்

DIN


அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 114 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சிக் கொடியை புதன்கிழமை ஏற்றிவைத்தார்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர மிகப் பெரிய கொடிக் கம்பம் சில தினங்களுக்கு முன்பு நிறுவப்பட்டது.
இந்த நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவச் சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த சிலைத் திறப்பு விழாவில் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 
இந்த விழாவுக்கு முன்பாக, அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய கொடிக் கம்பத்தில் திமுக கொடியை பறக்கவிடத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மிகப் பெரிய கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றினார்.
சுமார் 2,430 கிலோ எடையும், 114 அடி உயரமும், 760 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட இந்த கொடிக் கம்பம், இந்தியாவில் பிற கட்சி அலுவலகங்களில் உள்ள கொடிக் கம்பங்களைக் காட்டிலும் மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கொடிக்கம்பம் 12க்கு 12 அடி அளவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு அடுக்கு கான்கிரீட் மேடை மீது நிறுவப்பட்டுள்ளது. 
மின் மோட்டார் மூலமே இந்தக் கொடிக் கம்பத்தில் கொடியேற்ற முடியும். இதில் 30 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட திமுக கொடி ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கொடிக் கம்பத்தில் பறக்கும் கொடி இரவிலும் தெரியும் வகையில் இரண்டு ஹைபீம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, கொடிமர பீடத்தில் அலங்கார விளக்குகள் தானியங்கி சிஸ்டத்துடன் எரிந்து அணையும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொடிக் கம்பத்தை புணேயில் உள்ள தனியார் நிறுவனமும், கொடியை மும்பை நிறுவனமும் தயாரித்துள்ளன.
இந் நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எ.வ.வேலு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், எஸ்.சுதர்சனம், பி.கே.சேகர்பாபு, கு.க.செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT