தமிழ்நாடு

புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து

DIN

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றிய அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் கடந்த 2011-ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு கடந்த 2015 - ஆம் ஆண்டு ரகுபதி ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரியும், ரகுபதி ஆணையத்துக்கு தடை விதிக்க கோரியும் 3 பேரின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ரகுபதி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்து, ஆணையத்தின் ஆவணங்களை பரிசீலித்து தேவைபட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தார். 

இதையடுத்து, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், தமிழக அரசு ரகுபதி ஆணையத்தின் ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல், ஆவணங்களை பரிசீலிக்காமல் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு நேரடியாக மாற்றியுள்ளது சட்ட விரோதமானது. ஆணையம் எந்தவொரு அறிக்கையும் தாக்கல் செய்யாதபோது, எப்படி விசாரணைக்கு உத்தரவிட முடியும்? என வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், இந்த வழக்கைப் பொருத்தவரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரகுபதி ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்து, அந்த ஆவணங்களின் அடிப்படையில் முகாந்திரம் இருந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ரூ.629 கோடி முறைகேடு: மேலும், புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டியதில் ரூ.629 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் விசாரணை குறித்து இதுவரை எந்த உத்தரவையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. ரகுபதி ஆணையத்தின் அறிக்கையின்படி வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள மொத்த அறிக்கையையும் படிக்க வேண்டியதில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT