முகப்பு
தமிழ்நாடு

அந்நிய செலாவணி வழக்கு: சசிகலா மீது 20-ஆம் தேதி  'விடியோ கான்பெரன்ஸிங்' முறையில் குற்றச்சாட்டு பதிவு   

அந்நிய செலாவணி வழக்கில் சசிகலா மீது 20-ஆம் தேதி  'விடியோ கான்பெரன்ஸிங்' முறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.   

Updated On : 14 டிசம்பர், 2018 at 3:34 PM
பகிர்:

சென்னை: அந்நிய செலாவணி வழக்கில் சசிகலா மீது 20-ஆம் தேதி 'விடியோ கான்பெரன்ஸிங்' முறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.   

அமலாக்கப் பிரிவினர் ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிராக நான்கு வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில், கடந்த 2017 ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, காணொலிக் காட்சி வழியாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பின், அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக நவம்பர் 30-ஆம் தேதி அவரை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர் மதி உத்தரவிட்டிருந்தார்.

Advertisement

ஆனால், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சசிகலாவை ஆஜர்படுத்தவில்லையென பெங்களூரு சிறை நிர்வாகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம், சசிகலாவை நேரில் ஆஜர்படுத்துமாறு கர்நாடக சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.

உடனடியாக எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர் மதி உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   

அத்துடன் இந்த வழக்கில் விசாரணையை விடியோ கான்பெரன்ஸிங் முறையில் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், சசிகலா மற்றும் பாஸ்கரன் மீதான வழக்கினை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.     

இந்நிலையில் அந்நிய செலாவணி வழக்கில் சசிகலா மீது 20-ஆம் தேதி  'விடியோ கான்பெரன்ஸிங்' முறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.   

வெள்ளியன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர் மதி முன்னிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தாக்கல் செய்யபட்டது. இதையடுத்து அந்நிய செலாவணி வழக்கில் சசிகலா மீது 20-ஆம் தேதி  'விடியோ கான்பெரன்ஸிங்' முறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி மலர் மதி உத்தரவிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.