தமிழ்நாடு

சேலம் தலைவாசல் பகுதியில் 800 ஏக்கரில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம்

DIN

சேலம் தலைவாசல் கூட்டு சாலையில் 800 ஏக்கரில் சர்வதேச தரத்திலான கால்நடை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தை அடுத்த வீரகனூர் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அவர்  பேசியது:

வீரகனூர் பேரூராட்சியில் 21 அரசுத் துறைகள் மூலமாக 27,092 பேருக்கு ரூ.94.55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்,   ரூ.35.41 கோடி மதிப்பில் 31 புதிய திட்ட பணிகள் துவக்க விழா,   ரூ.1.55 கோடியில் முடிவுற்ற பணிகள் துவக்க விழா,

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவில் ரூ.131.51 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு சாலையில் உலகத்தரத்தில் 800 ஏக்கரில் கால்நடை ஆராய்ச்சி மையம் பல நூறு கோடியில் தொடங்கப்பட உள்ளது. 

இம்மையத்தில் விவசாயிகளுக்கு கால்நடைகளை எப்படி வளர்ப்பது, எப்படி பராமரிப்பது என்பது பற்றி பயிற்சியும்,  செயல்விளக்கமும் அளிக்கப்படும். இதில் கால்நடை,  மீன்,  பன்றி,  ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி செய்யப்படும். மேலும் உயர் ரக கால்நடைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் .

சேலம் மாவட்டத்திலேயே கெங்கவல்லி தொகுதியில்தான் அதிக பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இங்கு பாலங்கள்,  தடுப்பணைகள் கட்டும்போது மற்ற தொகுதிக்கு முன்மாதிரியாகத் திகழும்.

அதிமுக அரசில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை;  நன்மைகள் நடக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இது செயல்படுகிற அரசு என்பதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவே சான்றாக உள்ளது.

நதிநீர் பிரச்னைகளில் திமுக செய்தது என்ன? 

மத்தியில் பாஜக ஆட்சியின்போது,  முரசொலி மாறன்  மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது எந்த திட்டங்களையும் தமிழகத்துக்குச் செய்யவில்லை. பின்னர் பாஜக வலுவிழந்த பிறகு காங்கிரஸ் கூட்டணிக்கு மாறி திமுகவினர் அமைச்சர் பதவிகளைப் பெற்றனர். திமுகவுக்கு கொள்கையோ, கோட்பாடோ கிடையாது.

நதிநீர் பிரச்னைகளில் குறிப்பாக காவிரி,  முல்லைப்பெரியாறு,  பாலாறு பிரச்னைகளில் திமுக என்ன செய்தது? அவர்கள் எதையும் செய்யவில்லை. 

தமிழக அரசு மீது தொடர்ந்து எதிர்க்கட்சிகள் செய்து வரும் பொய் பிரசாரம் முறியடிக்கப்படும். 

ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த ஆட்சியில் விவசாயிகளுக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மைத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறையில் தமிழகம் தன்னிறைவு: குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கடந்த 2017-இல் ரூ.100 கோடியில் ஏரி, குளம் சீரமைக்கப்பட்டது. இந்த ஆண்டில் ரூ.328 கோடியில் 1,511 ஏரி, குளங்களில் குடிமராமத்துத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி தடுப்பணைகளை கட்டி வருகிறோம். வேளாண் துறையில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உள்ளது. உயர்கல்வியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 

2011 இல் 21 சதவீதமாக இருந்த உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை தற்போது 46 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார். 31 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். 

விழாவில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.பி.க்கள் வி.பன்னீர்செல்வம், காமராஜ்,  எம்எல்ஏக்கள் எஸ்.செம்மலை, ஜி.வெங்கடாசலம், மருதமுத்து, சின்னத்தம்பி, ராஜா, சித்ரா, மனோண்மணி, வெற்றிவேல்,  தமிழக தலைமை கூட்டுறவு வங்கியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT