தமிழ்நாடு

காவிரி பிரச்னை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்ற வேண்டும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

DIN

காவிரி  பிரச்னையில்  உச்ச நீதிமன்றத்தின் இறுதி  தீர்ப்பை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் தமிழக முதல்வரும்,  அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.  
அந்தக் கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியது:  
காவிரி பிரச்னை  50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.  இப் பிரச்னையில் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி,  தற்போது உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது.  
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்பினை  காவிரிப் படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. 
மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு  அறிக்கை தயாரிக்கத் தடை கேட்டு,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில்  கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.  தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. 
எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு  89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.   விவசாயிகள் உள்ளிட்ட யாரையும் பாதிப்புக்குள்ளாக்குவது தமிழக அரசின் நோக்கமில்லை.  இந்தியாவின் 2-ஆவது பசுமை வழிச் சாலை  தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.  ஒட்டுமொத்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  
முன்பெல்லாம் நிலத்தைக் கையகப்படுத்தும்போது குறைந்த அளவில் இழப்பீட்டுத் தொகை வழங்கினர். ஆனால்,  தற்போது விவசாயிகளுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.   
தமிழகத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  எனவே, சாலை உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வது அவசியம்.  வெளிநாடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே 8 வழிச் சாலை, 10 வழிச் சாலையை ஏற்படுத்தி தொழில் வளம் பெருகி,  சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  
அதுபோன்ற வாழ்க்கை தமிழகத்திலும் அமைய வேண்டும் என்றுதான் அரசு விரும்புகிறது.  அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். 
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை  அரசு வழங்கவிருக்கிறது.  மா,  தென்னை மரங்கள்,  வீடுகள்,  நிலங்களுக்குத் தேவையான  இழப்பீட்டுத் தொகை தருகிறோம்.   
அரை ஏக்கர், கால் ஏக்கர் நிலம் வைத்திருந்தவர்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு நிலம் அளித்து, அரசாங்கமே வீடு கட்டித் தருகிறது.   ஒரு திட்டம் வரும் போது,  அனைவரையும் சமாதானப்படுத்தித் தான் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT