தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் கோவிந்தா கோஷம் முழங்க பரமபதவாசல் திறப்பு

DIN

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு  இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று பெருமாளைத் தரிசிக்க ஸ்ரீரங்கத்தில் குவிந்து பக்தர்கள் விண்ணை பிளக்க கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பரவசமடைந்தனர்.

இத்திருக்கோயிலில் திருஅத்யயன உற்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த 7 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

பகல்பத்து உற்ஸவம் தொடங்கிய டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தினமும் கருவறையிலிருந்து புறப்பாடாகிய நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, திங்கள்கிழமை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பரமபதவாசல் திறப்பு: இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு ரத்தினங்கி அணிந்தும், வைர பூணூல், கிளி மாலையுடன் சிம்மகதியில் புறப்பாடான நம்பெருமாள், விரஜாநதி மண்டபம் சென்றதும் அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் கடந்து சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்ததும் விடிய விடிய காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா என்றும் ரெங்கா, ரெங்கா" என முழக்கமிட்டு பரவசமடைந்தனர். பின்னர், திருக்கொட்டகை சென்றடைந்து,

சாதரா மரியாதைகளைப் பெற்ற பின்னர், காலை 8.45 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள், நாளை புதன்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு மீண்டும் கருவறை சென்றடைகிறார்.

பரமபதவாசல் திறப்பையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ள ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் 3000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

வைகுந்த ஏகாதசி-பரமபதவாசல் திறப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்தனர்.

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நள்ளிரவு 12.05 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவமூர்த்திகள் பரமபதவாசல் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

சென்னை திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில், கோவை காரமடை ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில் உள்ளிட்ட வைணவ தலங்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்ட்டது. பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT