முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா உருவப்படம் திறப்பு: பேரவைத் தலைவருக்கு விஜயதரணி வாழ்த்து

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை சட்டப் பேரவையில் திறந்து வைத்ததற்காக சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபாலை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை கொறடா விஜயதரணி

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தைத் திறந்தமைக்காக, சட்டப்பேரவைத் தலைவரை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சிக் கொறடா விஜயதரணி.
பகிர்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை சட்டப் பேரவையில் திறந்து வைத்ததற்காக சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபாலை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை கொறடா விஜயதரணி வாழ்த்துத் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறந்து வைத்துள்ளதற்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தையும் திமுக நாடியுள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் படத்தைத் திறப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதரணி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பேரவைத் தலைவருக்கு வாழ்த்து: ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவரின் அறைக்கு விஜயதரணி வந்தார். பேரவைத் தலைவர் தனபாலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக் கூறினார். அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் விஜயதரணி கூறியது:
இந்திராகாந்திக்குப் பிறகு நான் மதிக்கும் தலைவர் ஜெயலலிதா. மகளிருக்காகப் பல்வேறு திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார். அவருடைய உருவப் படத்தைப் பேரவையில் திறப்பது தவறு அல்ல என்பது என் கருத்து. ஜெயலலிதா படத்தைத் திறக்கக் கூடாது என்பது காங்கிரஸின் முடிவாக இருக்கலாம். 
சொத்துக் குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார். அதன் பிறகு உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவர் உயிரோடு இருந்தவரை நீதிமன்றத்தின் முன்னால் குற்றமற்றவராகவே இருந்தார். அவர் இறந்த பிறகுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தது. ஒருவேளை, அவர் உயிரோடு இருந்தால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, விடுதலை கூட அடையலாம். எனவே, அவர் படத்தைத் திறந்து வைத்ததில் தவறு எதுவும் இல்லை என்றார்.
காங்கிரஸில் எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அந்தக் கட்சியின் கொறடாவே மீறி செயல்பட்டிருப்பது, பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தலைமைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட உள்ளது.
ஜெயலலிதாவை எதிர்த்தவர்: 2011-15-ஆம் ஆண்டு காலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவோடு பேரவையில் காரசார விவாதங்களில் ஈடுபட்டவர் விஜயதரணி. 
பேரவையில் ஒரு நாள் ஜெயலலிதாவை நேரடியாகவே கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்ததால், அதிமுகவினரின் எதிர்ப்புக்கு உள்ளாகியவர். இப்போது, அவரே காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறி ஜெயலலிதாவின் படத்தைத் திறக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →