வரும் ஆண்டு ஜனவரி 23, 24-இல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் சார்பில் இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2019 ஜனவரி 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடுவரும் ஆண்டு ஜனவரி 23, 24-இல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் சார்பில் இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2019 ஜனவரி 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழக அரசின் சார்பில் இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2019 ஜனவரி 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தொழில் தொடங்க ஆர்வம்: தமிழகத்தில் நிலவும் அமைதியான சட்டம் ஒழுங்கு சூழ்நிலை, தடையற்ற மின்சாரம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வலுவான கட்டமைப்பு, பல சர்வதேச விமான நிலையங்கள், பன்முக துறைமுகங்கள் மற்றும் திறன்மிக்க மனித ஆற்றல் ஆகியவை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக விளங்கி வருகின்றன.
இவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.
முதல் மாநாடு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
அதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பல நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில், 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகப் பங்கேற்று, ரூ.2.42 லட்சம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில் இதுவரை, ரூ.62,738 கோடி மதிப்பில் 61 நிறுவனங்களின் முதலீடுகள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன. அதன் மூலம், 96,341 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதல் மாநாட்டுக்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2019-ஆம் ஆண்டு ஜனவரி 23, 24 தேதிகளில் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.
ரூ.75 கோடி ஒதுக்கீடு: மாநாட்டை நடத்துவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மாநாட்டைச் சிறப்பாக நடத்தி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து கொண்டு செல்ல அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புகள், வெளிநாட்டு தொழில் கூட்டமைப்புகள், தூதரகங்கள், ஊடகங்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பணிகள் தீவிரம்: முதல் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலேயே பல்வேறு பணிகள் இன்னும் நடைபெறாமல் இருப்பதாகவும், அரசு கூறியவாறு போதுமான முதலீடுகள் ஈர்க்கப்படவில்லை எனவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் முதல் மாநாட்டையும் விட, 2-ஆவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்ட வேண்டும் என்ற முனைப்பில் தமிழக அரசு உள்ளது.
இதற்கான பணிகளில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்கு தேவையான அம்சங்கள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு அதிகாரி: அனைத்து முதலீட்டாளர்களையும் ஒருங்கிணைத்து மாநாட்டை நடத்துவதற்கு சிறப்பு அதிகாரி ஒருவரையும் தமிழக அரசு நியமிக்க உள்ளது.