தமிழ்நாடு

ஏர்செல் செல்லிடப்பேசி சேவை முடக்கம்: வாடிக்கையாளர்களுக்கு தாற்காலிக ஏற்பாடு

DIN

கடந்த 2 நாள்களாக வாடிக்கையாளர்கள் சந்தித்து வரும் சிக்னல் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடாக, ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து செல்போன் சேவை வழங்க தாற்காலிகமாக நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக ஏர்செல் நிறுவனம் அறிவித்துள்ளது. 
செல்போன் இணைப்பு சேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏர்செல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். செல்போன் கோபுரங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு ஏர்செல் நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் செலுத்தவில்லை எனத் தகவல் வெளியாகியது. அதாவது ஏர்செல் நிறுவனத்துக்கான செல்போன் சிக்னல்களை இரு தனியார் நிறுவனங்கள் அளித்து பராமரித்து வந்தன. இந்நிலையில் இந்த நிறுவனங்களுக்கான வாடகைப் பாக்கி தராததால் ஏற்கெனவே ஒரு நிறுவனம் சிக்னல் வழங்கும் சேவையை நிறுத்திவிட்ட நிலையில் 2-ஆவது நிறுவனமும் புதன்கிழமை திடீரென நிறுத்தியது.
மேலும் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஏர்செல் நிறுவனம் வழங்க முன்வந்தாலும், அதை ஏற்க மறுப்பதாகவும், ஏர்செல் நிறுவனம் இந்த நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்தக் காலத்துக்கான தொகை முழுவதையும் முழுமையாக தற்போதே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமை செயல் அதிகாரி விளக்கம்: இதுகுறித்து ஏர்செல் நிறுவனத்தின் தென் இந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணனிடம் கேட்டபோது, சிக்னல் கோபுரங்கள் செயல்படாததன் காரணமாக செல்போன் இணைப்புகள் கிடைப்பதில் பிரச்னை இருப்பது உண்மைதான். எனினும், விரைவில் இந்தப் பிரச்னை சரியாகிவிடும். மேலும் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் சேவை வழங்க தாற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் செட்டிங் பகுதிக்குச் சென்று மொபைல் நெட்வொர்க் ஆப்ஷனில், மேன்யூவலாக ஏர்டெல்லை தேர்வு செய்தால் போதும். பின்னர் ஏர்செல் நிறுவனத்தின் மொபைல் எண் இயங்கும்.
ஏர்செல் நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவையை எங்கள் நிறுவனத்தின் சிக்னல் கோபுரங்களோடு தனியார் நிறுவன சிக்னல் கோபுரங்களையும் வாடகைக்கு எடுத்து வாடிக்கையாளர்களுக்கு செல்போன் சேவை வழங்கி வருகிறோம். அதற்கான வாடகைப் பணத்தை மாதம் தோறும் நாங்கள் அவர்களுக்கு வழங்கியும் வருகின்றோம். ஆனால் அந்த தனியார் நிறுவனம் திடீரென ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே தரவேண்டும். காரணம் நாங்கள் நிதி நெருக்கடியில் உள்ளோம் எனக்கூறி கடந்த 2 நாள்களாக சேவையை முடக்கி வைத்துள்ளனர். மேலும் சேவையை நிறுத்தியுள்ள அந்த செல்போன் சிக்னல் கோபுர நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு: மேலும் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு மாற வேண்டுமானலும், மாறிக்கொள்ளலாம். அதற்காக 90 நாள்கள் கால அவகாசம் உண்டு. ஆனால் ஏர்செல் நிறுவனம் திவால் ஆகப் போகிறது என்பது உண்மையல்ல. நிதி நெருக்கடியில் இருப்பது உண்மை. அதை நாங்கள் சட்டப்படி மீட்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் சங்கர நாராயணன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT