தமிழ்நாடு

செவிலியர், பெயிண்டர் போர்வையில் நக்ஸலைட்டுகள் ஊடுருவல்: போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

DIN

திருவள்ளூர் அருகே கைது செய்யப்பட்ட நக்ஸலைட்டுகளிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், செவிலியர், பெயிண்டர் போர்வையில் அவர்கள் தமிழகத்தில் ஊடுருவி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
திருவள்ளூரை அடுத்த ஒதப்பை கிராமத்தில் நக்ஸலைட்டுகள் தங்கியுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து திருவள்ளூர்-பூண்டி சாலையில் தீவிர வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது, ஆட்டோவில் வந்த நக்ஸலைட்டுகள் தசரதன் (38), அவரது மனைவி செண்பகவல்லி(34) மற்றும் தசரதனின் சகோதரர் தடை செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வெற்றி வீர பாண்டியன்(40) ஆகிய 3 பேரையும் புல்லரம்பாக்கம் போலீஸார் பிப்ரவரி 10 -ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்காக பிப்ரவரி 21-ஆம் தேதி 3 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில், 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் அனுமதி அளித்தார். 
இதன் அடிப்படையில் திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை தொடங்கியது. இதில், நக்ஸலைட் தம்பதியான தசரதனும் செண்பகவல்லியும் பெயிண்டர், செவிலியர் போர்வையில் தமிழகத்தில் ஊடுருவி இருந்தது தெரிய வந்தது. இவர்கள் புதுக்கோட்டை மற்றும் மதுரையில் தங்கியிருந்துள்ளனர். 
திருச்சி அருகே புதுக்கோட்டையில் ஒரு பல் மருத்துவரிடம் செண்பகவல்லி செவிலியராகவும், தசரதன் அப்பகுதியில் பெயிண்டராகவும் இருந்து கொண்டு, அரசுக்கு எதிரான சதித் திட்டங்களைத் தீட்டியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. 
இதையடுத்து புதுக்கோட்டையில் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்த இருக்கின்றனர். அப்போது, நக்ஸலைட்டுகள் வீடு எடுத்து தங்குவதற்கு உதவியவர்கள் யார், அப்பகுதியில் அவர்களோடு தொடர்பு வைத்திருந்தவர்கள் யார் என்பன போன்ற விவரங்கள் அடுத்தக்கட்ட விசாரணையில் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். 
இதைத்தொடர்ந்து, நக்ஸலைட்டுகளுக்கு உடல் நலப் பரிசோதனை மேற்கொள்வதற்காக, துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 3 பேரையும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வியாழக்கிழமை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, பரிசோதனைகள் முடிந்ததும் நக்ஸலைட்டுகள் ஒவ்வொருவருக்கும் தலா 2 சார்பு ஆய்வாளர் உள்பட மொத்தம் 25 போலீஸார் பாதுகாப்புடன் இரு வாகனங்களில் அவர்கள் புதுக்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT