தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்துக்கு 'தேவர்' பெயர் சூட்டப்படுமா?: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

DIN

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவது தொடர்பாக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி எழுப்பிய கேள்விக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பிய சுப்பிரமணியன் சுவாமி, 'முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. சுபாஷ் சந்திர போஸுடன் இருந்தார் என்பதால் அவர் புறக்கணிக்கப்படுகிறார். 
தற்போது, தமிழகத்தில் புதிய அரசு இருப்பதால் இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் மீண்டும் மாநில அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வாரா?' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு பதில் அளித்துப் பேசுகையில், 'விமான நிலையங்களின் பெயரை மாற்றுவது தொடர்பாக மாநில சட்டப்பேரவைகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பரிந்துரையின்அடிப்படையில்தான் விமான நிலையங்களின் பெயர் மாற்றப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், தமிழக அரசு 2001 மற்றும் 2005-இல் ஓர் உத்தரவை வெளியிட்டிருந்தது. அதில், மாநிலத்தில் உள்ள அரசுக் கட்டடங்கள், இடங்கள் அல்லது மாநகராட்சிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட மாட்டாது எனக் கூறப்பட்டிருந்தது. தற்போதுள்ள அரசு இது தொடர்பாக முன்மொழிவு அனுப்பினால், அதற்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்காது. தேவர் மீது நாங்கள் மிகவும் மதிப்பு வைத்துள்ளோம்'. மேலும் 'விமான நிலையத்தின் பெயரை மாற்றும் விவகாரம் தொடர்பாக 9 முன்மொழிவுகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT