தமிழ்நாடு

11,993 பொங்கல் சிறப்புப் பேருந்துகள்; 9ம் தேதி முதல் முன்பதிவு: எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்

DIN


சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் 11,993 சிறப்புப் பேருந்துகளுக்கு வரும் 9ம் தேதி முன்பதிவு தொடங்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்து பல்லவன் இல்லத்தில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11, 12, 13ம் தேதிகளில் 11,993 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அவர்களது வசதிக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு ஜனவரி 9ம் தேதி தொடங்குகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இதற்காக 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும். பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்கள்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் எந்த பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என்பதையும் அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, ஆந்திரா செல்லும் பேருந்துகள் அண்ணாநகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், கிருஷ்ணகிரி வழியாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும், விக்ரவாண்டி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தாம்பரத்தில் இருந்தும், இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டையில் இருந்தும் இயக்கப்படும்.

மற்ற ஊர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்காக புதிய பேருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், மழை காலத்தில் தண்ணீர் கசியாதவாறு புதிய பேருந்துகள் வடிவமைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் முன்னிலை

உ.பி.யில் 'இந்தியா' கூட்டணி முன்னிலை

ஆந்திரப் பேரவைத் தேர்தல்: தெலுங்கு தேசம் முன்னிலை

SCROLL FOR NEXT