தமிழ்நாடு

நூலகங்களுக்கு விரைவில் புத்தகங்கள் கொள்முதல்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

DIN

தமிழக நூலகங்களுக்குத் தேவையான புத்தகங்களை விரைவில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் பிரமாண்டமான புத்தகக் காட்சியை நடத்தி வருகிறது. 41-ஆவது புத்தகக் காட்சி 708 அரங்குகளுடன் கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடக்கி வைத்து சிறந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசியது:
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பேரறிஞர் அண்ணா, சென்னை கன்னிமாரா நூலகத்தில் தொடாத நூல்களே இல்லை எனலாம். தேடிப்படித்த நூல்களால் எழுத்தாற்றல், பேச்சாற்றலை வளர்த்துக் கொண்ட அவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். 
அவரது வழியில் வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் தனி அறையில் இந்திய, மேற்கத்திய வரலாறு, அறிவியல் தொடர்பாக ஆயிரக்கணக்கான நூல்கள் இருக்கும். இதன் மூலம் தனது அறிவாற்றலை அவர் மேம்படுத்திக் கொண்டார். அரசியல் மட்டுமல்ல உலகில் பல துறைகளில் சாதித்தவர்களுக்கு நூல்கள்தான் வழிகாட்டியாக இருந்திருக்கின்றன. ஒரு நாட்டின் பண்பாடு, கலாசாரம், நெறிமுறைகளை அறிந்து கொள்ள இதுபோன்ற புத்தகக் காட்சிகள் வாசகர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
191 நூலகங்கள் கணினி மயம்: தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 191 முழு நேர நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. விரைவில் 123 நூலகங்களிலும் அந்த வசதி ஏற்படுத்தப்படும்.
மாவட்ட நூலகங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படுவதுடன் தேவையான நூல்களும் உள்ளன. 
இலங்கை போரின்போது யாழ்ப்பாண நூலகம் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டது. இதையடுத்து தமிழகத்திலிருந்து ஒரு லட்சம் அரிய நூல்களைச் சேகரித்து இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
உள்ளாட்சித் துறையிலிருந்து பொது நூலகத்துறைக்கு ரூ.168 கோடி வர வேண்டியுள்ளது. அதில் ரூ.25 கோடி விரைவில் கிடைக்கும். இதன் மூலம் நூல்கள் பதிப்பாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். நூல்களைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்றார்.
மத்திய சென்னை எம்.பி. விஜயகுமார், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஜெகநாதன், பொதுநூலகத் துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பபாசி தலைவர் வைரவன், செயலர் ஏ.ஆர்.வெங்கடாசலம், பொருளாளர் டி.எஸ். சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
விருது பெற்றவர்கள்: சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது- சேது சொக்கலிங்கம் (கவிதா பப்ளிகேஷன்), சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயணன் விருது- ஆர்.ராஜராஜன், சிறந்த விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது- எம்.பெரியசாமி (ஸ்ரீ ஈஸ்வர் எண்டர்பிரைசஸ்); சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு. முத்து விருது- டாக்டர் சு. முத்துச்செல்லக்குமார் (பேராசிரியர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி); பபாசி சிறந்த நூலகர் விருது- கு.மகாலிங்கம் (மகாத்மா காந்தி நூலகம், சைதாப்பேட்டை, சென்னை); சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது- கள்ளிப்பட்டி சு.குப்புசாமி; சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது- ச.சு. இராமர் இளங்கோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT