தமிழ்நாடு

திருமணம் செய்வதாகக் கூறி இளைஞர்களிடம் ரூ. 1.42 கோடி மோசடி: இளம்பெண் உள்பட குடும்பத்தினர் 4 பேர் கைது

DIN

இணையதள திருமணத் தகவல் மையத்தில் பதிவு செய்த பணக்கார இளைஞர்களைத் திருமணம் செய்வதாகக் கூறி ரூ. 1.42 கோடி மற்றும் நகையைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இளம்பெண் உள்பட அவரது குடும்பத்தினர் 4 பேரை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மென் பொறியாளர் பாலமுருகன் (29). இவர் ஹைதராபாதில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தனது திருமணத்துக்காக இணையதள திருமணத் தகவல் மையம் மூலமாகப் பதிவு செய்திருந்தார். 
இவரை, கோவை, பாப்பநாயக்கன்பாளையம், தனலட்சுமி நகரைச் சேர்ந்த ஸ்ருதி (எ) மைதிலி வெங்கடேஷ் (21) என்பவர் தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிப் பழகி வந்துள்ளார். அப்போது, அடமானத்தில் உள்ள வீட்டை மீட்க வேண்டும், தாய்க்கு மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற வேண்டும், குடும்பச் செலவுக்கு என பல்வேறு காரணங்களைக் கூறி பாலமுருகனிடம் பணம் கேட்டுள்ளார்.
அதை நம்பிய பாலமுருகன், தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்குத் தானே செலவு செய்கிறோம் என எண்ணி, கடந்த 2017 மே 24-ஆம் தேதி முதல் 2018 ஜனவரி 1-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ. 41 லட்சம் வரை ஸ்ருதியிடம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, திருமணம் செய்து கொள்ளப் போகும் ஸ்ருதியின் புகைப்படத்தை சென்னையில் உள்ள நண்பரிடம் பாலமுருகன் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்த்த அவரது நண்பர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஸ்ருதி பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஸ்ருதியை நேரில் பார்க்க பாலமுருகன் கோவை வந்துள்ளார். ஆனால், பாலமுருகனைச் சந்திப்பதை தவிர்த்த அவர் செல்லிடப்பேசியையும் அணைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, மாநகரக் காவல் ஆணையர் கு.பெரியய்யா உத்தரவின் பேரில் துணை ஆணையர் பெருமாளின் அறிவுறுத்தலின்படி மாநகரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ருதியை வியாழக்கிழமை கைது செய்தனர். 
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சித்ரா (எ) அமுதா வெங்கடேஷ் (47), தந்தை பிரசன்ன வெங்கடேஷ் (57), சகோதரர் சுபாஷ் (19) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். 
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இணையதள திருமணத் தகவல் மையத்தில் பதிவு செய்த பணக்கார இளைஞர்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமாரிடம் ரூ. 22 லட்சமும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரிடம் ரூ. 15 லட்சமும், சிதம்பரத்தைச் சேர்ந்த அருள்குமரகுரு ராஜாவிடம் 20 பவுன் நகையும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்கமலிடம் ரூ. 21 லட்சமும் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதேபோல, சென்னை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விஜய், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரையும் திருமணம் செய்வதாகக் கூறி அவர்களிடமும் மோசடி செய்திருப்பதும், இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை, நாகப்பட்டினம் போலீஸார் ஸ்ருதி மீது மோசடி வழக்குப் பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது. 
மேலும், இணையதள திருமணத் தகவல் மையம் மூலமாகப் பணக்கார இளைஞர்களைக் குறி வைத்து, அவர்களைத் தொடர்பு கொண்டு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடிசெய்திருப்பதும் தெரியவந்துள்ளது. 
இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் அளிக்கும்பட்சத்தில்தான் எத்தனை பேரிடம் அவர் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT