தமிழ்நாடு

காவல்துறையைக் கண்டித்து தீக்குளித்த கார் ஓட்டுநர் மணிகண்டன் சாவு

DIN

சென்னை, தரமணியில் காவல்துறையைக் கண்டித்து தீக்குளித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பனவடலிசத்திரம் அருகேயுள்ள ஆயில்பட்டியைச் சேர்ந்த ரா.மணிகண்டன், சென்னையில் தங்கியிருந்து "கால் டாக்ஸி' ஓட்டி வந்தார். இந்நிலையில் தரமணி ராஜீவ்காந்தி சாலையில் அவர் காரில் புதன்கிழமை சென்றபோது, அங்கு நின்ற போக்குவரத்துப் போலீஸார் அவரை மறித்து சீட்பெல்ட் அணியவில்லை என்று கூறி வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து போலீஸாருக்கும், மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர், மணிகண்டனை ஆபாசமாகப் பேசி, தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை காலை 11.20 மணியளவில் உயிரிழந்தார்.
அவருக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சலாலும், மூச்சுத் திணறலாலும் இறந்ததாகத் தெரிகிறது. இதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 
இதைத் தொடர்ந்து மணிகண்டன் குடும்பத்தினரும், கால் டாக்ஸி ஓட்டுநர் சங்க நிர்வாகிகளும், மணிகண்டன் இறப்புக்கு காரணமாக 4 போலீஸார் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். மணிகண்டன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதித்துறை நடுவர் விசாரணை: இதற்கிடையே மணிகண்டன் இறப்பு குறித்து நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதையடுத்து 
எழும்பூர் நீதித்துறை நடுவர் கோபிநாத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
மணிகண்டனின் சடலம் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றபோது அதை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரம் தொடர்ந்த நிலையில், போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். அதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு 7 மணி அளவில் போலீஸார் சில உறுதிமொழிகளை அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். போராட்டத்தின்போது ஆயுதப்படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்புக்காக அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.


காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கார் ஓட்டுநர் மணிகண்டன் தற்கொலைக்கு காரணமானவராகக் கருதப்படும் காவல் உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வனை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
தரமணியில் கார் ஓட்டுநர் மணிகண்டன் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக துறை ரீதியிலான விசாரணைக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார். இந்த விசாரணையை அடுத்து தாமரைச்செல்வனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் விசுவநாதன் உடனே உத்தரவிட்டார். இந்நிலையில் மணிகண்டன் வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வனை பணியிடை நீக்கம் செய்து ஆணையர்அ.கா. விசுவநாதன் உத்தரவிட்டார். அத்துடன் சம்பவ இடத்தில் இருந்த 3 காவலர்களிடம் தொடர்ந்து துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT