தமிழ்நாடு

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி ஆனந்தன்: அப்பா எப்போ வருவார் எனக் கேட்கும் குழந்தைகள்

தொலைக்காட்சி, பிரிட்ஜ், டேபிள் என அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்ட ஒரே அறை வீட்டில் ஓரிடம் மட்டும் சற்று தூய்மைப்படுத்தப்பட்டு காலியாக வைக்கப்பட்டிருந்தது.

ENS


சென்னை: தொலைக்காட்சி, பிரிட்ஜ், டேபிள் என அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்ட ஒரே அறை வீட்டில் ஓரிடம் மட்டும் சற்று தூய்மைப்படுத்தப்பட்டு காலியாக வைக்கப்பட்டிருந்தது.

அதில், என்கவுண்டரில் பலியான ஆனந்தனின் உடல் கிடத்தப்பட உள்ளது.

இரண்டு தோளிலும், அப்பா எப்போது வருவார் என்று கேட்டபடி இரண்டு குழந்தைகளும் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்க, அழுதழுது கண்கள் வீங்கிய நிலையில் அமர்ந்திருந்தார் ஆனந்தனின் மனைவி ரஷிதா.

சென்னையில் நேற்று முன்தினம் ரவுடிகள் சிலர் ராயப்பேட்டை காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ராஜவேலுவை அரிவாளால் தாக்கி விட்டு தப்பியோடினர். 

காவலர் ராஜவேலுவை தாக்கியது ரவுடி ஆனந்தன் என தெரியவந்ததையடுத்து ரவுடி ஆனந்தனை கைது செய்ய காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். 

இந்நிலையில் இன்று இரவு தரமணி அருகே ரவுடி ஆனந்தனை காவலர்கள் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் ரவுடி உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சனம் துப்பாக்கிச்சூடு நடத்தி ரவுடி ஆனந்தனை சுட்டுக்கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் பற்றி ரஷிதாவின் அருகில் அமர்ந்திருந்த ஆனந்தனின் சகோதரி கூறுகையில், திங்கட்கிழமை இரவு அவர் குடித்திருந்தார். சாப்பிட வருமாறு அழைத்த போது இங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அப்போது தூரத்தில் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆனந்தனும் சிலரும் சேர்ந்து காவலரை தாக்குவதாகக் கூறினர். அங்கு ஓடிய போது, அவர்கள் தப்பியோடிவிட்டனர். அங்கிருந்த சிலர் காவலரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். நாங்கள் ஆனந்தனை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், அவன் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என்றார்.

மேலும், அன்று இரவு காவலர்கள் இங்கு வந்து, காவலர் ராஜவேலுவை தாக்கியவர்கள் பற்றி கேட்டனர். ஆனந்தன் வீட்டுக்கு வந்து எல்லா பொருட்களையும் போட்டு உடைத்தனர். ஆனந்தனோ, அவரது மனைவியோ வீட்டில் இல்லாததால் அவன் அம்மாவை காவல்துறையினர்  அழைத்துச் சென்றுவிட்டனர்.

பிரச்னை என்று தெரிந்ததும், ரஷிதா தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அன்று இரவு முழுவதும் ஆனந்தனின் தாய் காவல்நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் வந்து, ஆனந்தனை காவல்துறையினர் பிடித்து விட்டனர். அவன் கை உடைந்துவிட்டது என்று கூறியிருந்தார். அவனை காவல்துறையினர் கைது செய்துவிடுவார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால், சில மணி நேரங்களில் தொலைக்காட்சிகளில் பார்த்துத்தான் ஆனந்தனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டது தெரிய வந்தது என்கிறார் அவரது தாயார்.

ரவுடித்தனம் என்ற பெயரில் சட்டத்துக்கு விரோதமான பல காரியங்களைச் செய்து சமூகக் குற்றவாளிகளாக மாறும் இதுபோன்றவர்கள், என்கவுண்டரில் மரணிக்கும் போது வருத்தம் ஏற்படாவிட்டாலும், இவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கும், அதிலும் ஒன்றும் அறியாத குழந்தைகள் இருக்கும் என்று தெரிய வரும் போது மனம் சற்று கனக்கவே செய்கிறது.

இதுபோன்ற சம்பவங்கள் தற்போது இருக்கும் ரவுடிகளுக்கு ஒரு பாடமாக மாற வேண்டும். காதலைப் போல ரவுடித்தனமும் ஒரு வழிப் பாதை, அதில் நுழைய முடியும், திரும்பி வர முடியாது என்று தத்துவம் சொல்லாமல், நல்வழியில் திருந்தி வாழ வேண்டும், தங்கள் குழந்தைகளையும் வாழ வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டால் நிச்சயம் ஆட்சியாளர்கள் சொல்வது போல தமிழகம் அமைதிப் பூங்காவாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT