முகப்பு
தமிழ்நாடு

தனியாரிடமிருந்து நிலத்தைப் பெற புதிய முறை: சட்ட மசோதா நிறைவேற்றம் 

தனியாரிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்தும் புதிய முறைக்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

Updated On : 10 ஜூலை, 2018 at 1:40 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

தனியாரிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்தும் புதிய முறைக்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களை திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கும், பயன்படுத்துவதற்கும் முழுமைத் திட்டங்கள், மண்டலத் திட்டங்கள், புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் வகை செய்கின்றன. இந்த வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது நிலம் குறைந்த அளவிலேயே கிடைக்கக்கூடிய அரிதான வளமாக உள்ளது. நகரப் பகுதிகளில் வளர்ச்சியை உறுதி செய்யவும், அங்கு குடியிருப்போரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் அவசியமாகும்.
இதற்காக புதிய சாலைகள் அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்துதல், போக்குவரத்து வசதி மற்றும் இதர அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் நிலம் மிகவும் முக்கியமாக இருக்கிறது.
தனியார் வசம் நிலம்: மாநிலத்தின் பெருமளவு நிலப்பகுதி தனியார் வசம் உள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்த நிலங்களை கையகப்படுத்தும் முறை மிகவும் கடினமானதாகவும், அதிக பொருட்செலவை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் உள்ளது. இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க, வளர்ச்சி உரிமைகள் மாற்றம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, அரசின் திட்டங்களுக்காக நிலங்களை வழங்கும் தனியார்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரொக்கமாக அளிக்கப்படாது. இதற்குப் பதிலாக வளர்ச்சி உரிமைகள் அளிக்கப்படும். தனியார் நில உரிமையாளரால் ஒப்படைக்கப்பட்ட நிலத்துக்குப் பதிலாக கூடுதலாக கட்டடப் பரப்பினை அவர் பெற்றுக் கொள்ளலாம். அதாவது, அனுமதிக்கப்பட்ட தளப்பரப்பு குறியீட்டைக் காட்டிலும் கூடுதலாக சம்பந்தப்பட்ட தனிநபர் பெற்றுக் கொள்ளலாம். இதனை நில உரிமையாளர் தனக்குப் பயன்படுத்திக் கொள்ளவோ அல்லது
பிறருக்கு மாற்றம் செய்யவோ முடியும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் மீது திமுக சில கருத்துகளைத் தெரிவித்தது. ஆனாலும், மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.