தமிழ்நாடு

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு: உச்ச நீதிமன்ற அனுமதி இன்று கிடைக்குமா?

DIN

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தேதியை இறுதி செய்யும் வகையில், கால நீட்டிப்புக்கான உச்ச நீதிமன்ற அனுமதி திங்கள்கிழமை (ஜூலை 16) கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளிடையே எழுந்துள்ளது.
அவ்வாறு அனுமதி கொடுத்துவிட்டால், பி.இ. சிறப்புப் பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்குப் பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வைத் தொடங்க பல்கலைக்கழக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் கலந்தாய்வு: தமிழகத்தின் 509 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு, முதன் முறையாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வை முழுவதும் ஆன்-லைன் மூலம் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, பி.இ. முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கியாக வேண்டும். அதன் காரணமாக பி.இ. கலந்தாய்வை ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி, ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிப்பதை பல்கலைக்கழகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
பி.இ. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வை எத்தனை நாள்கள் நடத்துவது, எப்போது தொடங்குவது என்பது, எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வைப் பொருத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புள்ளதால், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
அனுமதி கேட்டு மனு: இந்நிலையில், 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சற்று தாமதமாகத் தொடங்கப்பட்டது. அதாவது ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் காரணமாக, பி.இ. கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இயலாமல் போனது. அது மட்டுமின்றி, மீதமுள்ள 20 நாள்களில் கலந்தாய்வை நடத்தி முடிக்க இயலாது என்பதால், கூடுதல் கால அவகாசம் கேட்டும், பி.இ. முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்க அனுமதிக்கக் கோரியும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இழுபறி முடிவுக்கு வருமா? இம்மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 13-இல் பட்டியலிடப்பட்டது. இதனால் உச்சநீதிமன்றம் அன்றைய தினமே அனுமதி கொடுத்துவிடும் என தமிழக உயர்கல்வித் துறை அதிகாரிகளும், அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மனு மீதான விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தேதிகளை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் வருகிறது. இந்த முறை நிச்சயம் அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துவிட்டால், உடனடியாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் இறுதி செய்யப்பட்டு, பி.இ. சிறப்புப் பிரிவு இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கப்பட்டு விடும். எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்காக காத்திருக்கப்போவதில்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

SCROLL FOR NEXT