தமிழ்நாடு

புதுவையில் ஊதியமின்றி தவிக்கும் 6 ஆயிரம் அரசு நிறுவன ஊழியர்கள்!

ஜெபலின்ஜான்

புதுச்சேரி: புதுவையில் ஓராண்டுக்கும் மேலாக ஊதியம் இன்றி தவிக்கும் 6 ஆயிரம் அரசு நிறுவன ஊழியர்களின் பிரச்னைக்கு 2018-19 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
குறுகிய நிலப்பரப்பைக் கொண்ட புதுவை யூனியன் பிரதேசத்தில் சுமார் 25,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் உரிய நிதி ஒதுக்கப்பட்டு மாதம்தோறும் முறையாக ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. 
அதேநேரத்தில், அரசு சார்பு நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாண்டெக்ஸ், பான்பேப், கதர் வாரியம், குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம், வேளாண் விற்பனைக் குழு, கூட்டுறவு நூற்பாலைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் சுமார் 6ஆயிரம் பேருக்கு ஓராண்டுக்கும் மேலாக (ஒரு சில நிறுவனங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல்) ஊதியம் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
புதுவையில் இயங்கும் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதே இதற்குக் காரணம். இவற்றை சீரமைக்க புதுவை அரசு எடுத்த பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இந்த நிறுவனங்களை மேம்படுத்த அரசு வழங்கிய மானியத்தை வைத்தே ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசு நிறுவனங்களில் ஊதியம் வழங்க மானியத்தை பயன்படுத்தக் கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கடந்த மாதம் உத்தரவிட்டார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக புதுவையில் போதிய வரி வருவாய் இல்லை. மேலும், மத்திய அரசு நிதியும் 70 சதவீதத்திலிருந்து படிப்படியாகக் குறைந்து, தற்போது 27 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. இந்த இக்கட்டான நிலையில் 6 ஆயிரம் ஊழியர்கள் ஊதியம் இன்றி தவிக்கின்றனர்.
இந்த 6ஆயிரம் ஊழியர்களில் அதிகபட்சமாக 1,300 பேர் பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கடந்த 13 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கல்வித் துறையில் ரொட்டி, பால் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள 950 ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
பாசிக் நிறுவன ஊழியர்கள் 900 பேருக்கு கடந்த 32 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை. கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் (கூட்டுறவு முறையில் இயங்கும் நிறுவனம்) 800 பேருக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. காரைக்கால் நூற்பாலையில் பணியாற்றும் 460 பேர் கடந்த 17 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இதேபோல, கே.வி.கே. விவசாயப் பண்ணையில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், கதர் வாரியம், குடிசை மாற்று வாரியம், வேளாண் விற்பனைக் குழு, பான்டெக்ஸ், பான்பேப் உள்பட மேலும் சில அரசு சார்பு நிறுவனங்களுக்கும், பொதுப்பணித் துறையில் உள்ள சார்பு நிறுவன ஊழியர்களுக்கும் பல மாதங்களாக ஊதிய நிலுவை உள்ளது. இதனால், இந்நிறுவன ஊழியர்கள் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கூறியதாவது: 
பல மாதங்களாக ஊதியம் கிடைக்காததால் ஊழியர்கள் தங்களது குடும்பச் செலவுகளை ஈடு செய்ய இரவு நேரங்களில் காவலாளி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர். 
தற்போது ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறந்துள்ள நிலையில், தங்களது பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 
இவர்களின் பிரச்னைக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் முதல்வர் தீர்வு காண வேண்டும் என்றார். 
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம் கூறியதாவது: பாசிக் நிறுவனம் விவசாயிகளுக்கு இடுபொருள்கள், விதை உள்ளிட்டவற்றை மலிவு விலையில் வழங்கி வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கிலும், பாப்ஸ்கோ நிறுவனம் விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருள்களை நியாயமான விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யும் நோக்கத்திலும் தொடங்கப்பட்டது. 
ஆனால், தற்போது பாப்ஸ்கோ நிறுவனம் பெங்களூரு, உள்ளூர் சந்தைகளில் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்கிறது. பாசிக், பாப்ஸ்கோ நிறுவனம் மதுபானக் கடைகளை நடத்துகின்றன. 
அதேபோல, கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காகவும், உள்ளூரில் துணி உற்பத்தியைப் பெருக்கவும் உருவாக்கப்பட்ட பான்டெக்ஸ் வெளி மாநிலங்களில் துணிகளை வாங்கி விற்பனை செய்கிறது. உள்ளூர் துணிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய உருவாக்கப்பட்ட பான்பேப் அந்த நோக்கத்தில் இருந்து விலகிவிட்டது. அரசு சார்பு நிறுவனங்களை என்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் அரசுகள் திட்டமிட்டே மூடுவிழா நடத்தும் நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டன என்றார் ராஜாங்கம்.
இதுகுறித்து முதல்வர் வே.நாராயணசாமிடம் கேட்டபோது, அரசு சார்பு நிறுவனங்கள் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றதற்கு என்.ஆர். காங்கிரஸ் அரசு தான் காரணம். இந்திரா நகர் தொகுதியில் மட்டும் 3,000 பேருக்கு மேல் வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக, முறைகேடாக அரசு நிறுவனங்களில், தேவைக்கு அதிகமான ஆள்கள் நியமிக்கப்பட்டதால், அவர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நெருக்கடி உருவாகியுள்ளது. 
இருப்பினும், அரசு சார்பு நிறுவனங்களை சீரமைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆய்வு செய்ய விஜயன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT