தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்க நடவடிக்கை

DIN

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நன்செய் நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக, முல்லைப் பெரியாறு அணையின் தலை மதகிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீரை திறந்து விட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முதல், விநாடிக்கு 200 கனஅடி வீதம் 120 நாள்களுக்கு, தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், உத்தமபாளையம் வட்டத்தில் 11, 807 ஏக்கர், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கர், போடிநாயக்கனூர் வட்டத்தில் 488 ஏக்கர் என 14, 707 ஏக்கர் முதல் போகத்துக்கு பாசன வசதி பெறும்.
குடிநீருக்கும் திறப்பு: தேனி, மதுரை மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 127.20 அடியாக உள்ளது. 1,467 மில்லியன் கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்கு விதைநெல், அம்மா உயிர் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல்லில் இயந்திர நடவு மேற்கொள்ள 600 ஹெக்டேருக்கு ரூ.30 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 
தேனி மாவட்டத்துக்கு தேவையான ரசாயன உரங்களான யூரியா 1,543 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 1,498 மெட்ரிக் டன்னும், பொட்டாஸ் 983 மெட்ரிக் டன்னும், கலப்பு உரங்கள் 1,942 மெட்ரிக் டன்னும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது எடுத்த நடவடிக்கைகளைப்போல், பேபி அணையை பலப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு உள்ளது. அதை பலப்படுத்திய பின்னர், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்துக்கு நீர்த்தேக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், தேனி மக்களவை உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, பெரியாறு வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், வட்டாட்சியர் பாலசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT