தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

DIN

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். 
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-ஆவது மத்திய நிதி ஆணையத்தின் 2017-18 ஆண்டுக்கான 2-ஆம் தவணை மானியம், செயலாக்க மானியம்; 2018-19 ஆம் நிதி ஆண்டுக்கான முதல் தவணை அடிப்படை மானியத் தொகை ஆகியவற்றை விடுவித்தல் தொடர்பாக மத்திய நிதித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் புருஷோத்தம் ரூபலா ஆகியோரை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை சந்தித்தார். 
மேலும், கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசு அச்சகத்தை தொடர்ந்து கோவையில் இயங்க வைத்தல் தொடர்பாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்கவார் ஆகியோரையும் சந்தித்தார். அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களிடம் அவர் தனித் தனியாக மனுக்களை அளித்தார்.
பின்னர் இச்சந்திப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது: 
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, 12 மாநகராட்சிகளையும் நவீன நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நவீன நகரம் திட்டத்தில் திண்டுக்கல் விடுபட்டது. திண்டுக்கல் மாநகரையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல அம்ரூத் திட்டத்தில் 28 நகரங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தமட்டில், வார்டு வரையறைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவை கூடிய விரைவில் முடிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றார் எஸ்.பி. வேலுமணி. 
இச்சந்திப்பின் போது, புது தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் என். முருகானந்தம், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ. பிரகாஷ், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கா. பாஸ்கரன், மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர்கள் பி. வேணுகோபால் (திருவள்ளூர்), சி. மகேந்திரன் (பொள்ளாச்சி) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT