தமிழ்நாடு

தமிழ்மொழியின் செல்வாக்கை மேலும் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் பாண்டியராஜன்

DIN

உலக அளவில் தமிழ் மொழியின் செல்வாக்கை மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.
மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் 2 நாள்கள் இலக்கிய விழா நடைபெற்றது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை அமைச்சர் க.பாண்டியராஜன் திறந்து வைத்தார். 
பின்னர் அவர் பேசியது:
உலகில் அதிக செல்வாக்குப் பெற்ற மொழிகளில் 14-ஆவது இடத்தில் தமிழ் இருக்கிறது. அதை 10-ஆவது இடத்துக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழ் வளர்ச்சித் துறை தொடங்கி இருக்கிறது. மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம் ஆகிய 3 அமைப்புகளையும் ஒருங்கிணைத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் மையமாக உலகத் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்படும். முதல் கட்டமாக உலகம் முழுவதும் செயல்படக் கூடிய 50 தமிழ்ச் சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. 
உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழை அதிகம்பேர் பேசக் கூடிய மொழியாக உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 
தமிழ் வளர்ச்சி, கலை, பண்பாடு, அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட துறைகளை அனைத்தும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் மொழி வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டங்களைச் செயல்படுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் ரூ.50 கோடியில் பழந்தமிழர் அருங்காட்சியகம், ஐந்திணைப் பூங்கா அமைக்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவடையும். ரூ.6 கோடியில் நூலகம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
சங்கப்பலகை, மின்னிதழ் தொடக்கம்
நிகழ்ச்சியில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் தங்களது படைப்புகளை அரங்கேற்றும் சங்கப் பலகையை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடக்கி வைத்தார். மேலும் உலகத் தமிழ் மின்னிதழை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், உலகில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும், பெருமைக்குரிய செம்மொழிகளில் ஒன்றாக இருப்பது தமிழ். தமிழின் சிறப்பைப் போற்றிப் பாதுகாக்கவும், அதன் வளர்ச்சிக்காகவும் தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றார். நிகழ்ச்சியில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி.சந்தோசம், மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு.சேகர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விஜயராகவன் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT