கிரானைட் முறைகேடு: மதுரை தனியார் நிறுவனத்தின் ரூ.37.79 கோடி அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் ரூ.37.79 கோடி மதிப்புள்ள 158 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் ரூ.37.79 கோடி மதிப்புள்ள 158 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
மதுரை மேலூர், மதுரை கிழக்குப் பகுதியில் சுமார் 194 தனியார் கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்தக் குவாரிகளில் பெரும்பாலானவை அரசின் விதிமுறைகளை மீறியும், அரசின் நிலத்தை ஆக்கிரமித்தும் செயல்படுவது கடந்த 2014-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இவ்வாறு விதிமுறை மீறலில் ஈடுபட்ட 84 குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. காவல்துறையினரும் இந்த நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்குகளின் விசாரணை, மதுரை மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் மதுரையைச் சேர்ந்த சி.பெரியகருப்பன், அவரது குடும்பத்தினர் கே.பாலகிருஷ்ணன், பி.டி.சுப்பையா நடத்தும் குமார் கிரானைட்ஸ் நிறுவனம் மற்றும் குமார் ஏற்றுமதி நிறுவனம் மதுரை சுற்றுப்புறப் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பல்வேறு வண்ணங்கள் கொண்ட கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், கிரானைட் கற்களை விதிமுறைகளை மீறி கனரக இயந்திரங்கள் மூலமும், அதிக சக்தி கொண்ட வெடிகள் மூலம் தகர்த்து எடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.
மேலும் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களைப் பதுக்கி வைத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்று, அதிக அளவில் லாபம் ஈட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அந்த இரு நிறுவனங்கள் மீதும் மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அண்மையில் இந்த இரு நிறுவனங்கள் மீதும் இரு குற்றப் பத்திரிக்கைகளை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதையடுத்து, முறைகேடான வழியில் அரசு சொத்தை அபகரித்து பணம் ஈட்டிய இரு நிறுவனங்களின் சொத்துகளை முடக்குமாறு தமிழக காவல்துறை, அமலாக்கத்துறைக்குப் பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையிலும், பணமோசடி சட்டத்தின் கீழும் இரு நிறுவனங்களுக்கும் சொந்தமான ரூ.37.79 கோடி மதிப்புள்ள 158 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை வியாழக்கிழமை முடக்கியது. இந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.