முகப்பு
தமிழ்நாடு

திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் சுற்று தண்ணீர் வழங்க முதல்வர் உத்தரவு

திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு இரண்டாம் சுற்று தண்ணீர் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு இரண்டாம் சுற்று தண்ணீர் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பிஏபி திட்ட ஒப்பந்தப்படி ஆழியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு ஆண்டுதோறும் 7.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். கடந்த 8 மாதங்களில் பிப். 24ஆம் தேதி வரை 5.50 டிஎம்சி தண்ணீரைக் கேரளத்துக்குத் தமிழகம் வழங்கி உள்ளது.
மீதமுள்ள தண்ணீரை வழங்க 4 மாத கால அவகாசம் உள்ள நிலையிலும், கேரள மாநிலம், சித்தூர் எம்எல்ஏ கிருஷ்ணன் குட்டியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டன. சிறுவாணி அணையில் இருந்து கேரளத்துக்கு அதிக நீர் வெளியேற்றப்பட்டது. 
இதையடுத்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு வழங்கப்பட்ட தண்ணீரை ஆழியாறு அணைக்குத் திருப்பி, கேரளத்துக்கு விநாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீரைத் தமிழக அதிகாரிகள் திறந்துவிட்டனர்.
திருமூர்த்தி அணைக்குச் சென்ற தண்ணீர் கேரளத்துக்குத் திருப்பப்பட்டதால், திருமூர்த்தி அணை பாசனப் பகுதிகளுக்கு இரண்டாம் சுற்று தண்ணீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பிஏபி அலுவலகத்தை தமிழக விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயப் பிரதிநிதிகளைத் தமிழக அரசு அழைத்தது.
பேச்சுவார்த்தையில் பொதுப் பணித் துறைச் செயலாளர் பிரபாகரன், மின் வாரிய முதன்மைப் பொறியாளர் சந்திரபோஸ் உள்ளிட்ட அதிகாரிகள், பிஏபி திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் உள்ளிட்ட 9 பேர் கொண்ட விவசாயப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை புதன்கிழமையைத் தொடர்ந்து, வியாழக்கிழமையும் நடைபெற்றது. இதில், சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் மகேந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
விவசாயிகளின் கோரிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருமூர்த்தி அணைக்குப் பரம்பிக்குளத்தில் இருந்து தண்ணீர் வழங்கி, திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் சுற்றுக்குத் தண்ணீர் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, பேச்சுவார்த்தைக்குச் சென்ற விவசாயப் பிரதிநிதிகள், முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →