தமிழ்நாடு

போரூர் அருகே பள்ளி கழிவு நீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி மாணவன் பலி! 

DIN

சென்னை: போரூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் திறந்திருந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் புறநகரான  போரூரை அடுத்து உள்ளது அய்யப்பன் தாங்கல். இங்கு ஆர்.ஆர். நகர் பிரதான சாலையில் 'மாசி மெட்ரிகுலேசன் பள்ளி' என்னும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. 600-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர்.

இதே பள்ளியில் அருகிலுள்ள பெரியகொளுத்துவான் சேரி, மதுரம் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன் என்பவரது மகன் கிருதீஸ்வரன் எல்.கே.ஜி படித்து வந்தான். வெள்ளி மதியம் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையில் உள்ள கழிவு நீர்த் தொட்டியில் அடைப்புகள் நீக்கும் பணி நடைபெற்று வந்தது. பணியில் ஈடுபட்டவர்கள் தொட்டியின் கதவைத் திறந்து வைத்து விட்டு சென்று விட்டனர். அப்பொழுது கிருதீஸ்வரன் உள்ளிட்ட எல்கேஜி மாணவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில் சிறுவன் கிருதீஸ்வரன் தவறி உள்ளே விழுந்துள்ளான். இதனைக் கண்டதும் மற்ற மாணவர்கள் பதறியபடி அங்கிருந்து வெளியே வந்து சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிறுவன் கிருதீஸ்வரனை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தினை கேள்விப்பட்டு அங்கு கூடிய சிறுவனின் பெற்றோர்கள் இறந்து போன சிறுவனின் மரணம் குறித்து தங்களுக்கு சரியான முறையில் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.  மேலும் இந்த பள்ளி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் பள்ளி உரிமையாளர் மாசிலாமணியை கைது செய்யும் வரை இறந்த சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் எனவும்  சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT