தமிழ்நாடு

காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவம்

DIN

சென்னை, அயனாவரத்தில் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள மேலையூரைச் சேர்ந்த ராஜாராம் மகன் சதீஷ்குமார் (33). இவர் சென்னை அயனாவரம் சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தார். இதனால் அவர் டி.பி.சத்திரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் சதீஷ்குமார் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் பணிமுடித்து வீட்டுக்குச் சென்றார். நள்ளிரவு 1 மணியளவில் மீண்டும் அயனாவரம் காவல் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சதீஷ்குமார் வந்துள்ளார். அப்போது அவர், சிறிது பதற்றத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முன் கடிதம்: தனது மேஜையில் அமர்ந்த சதீஷ்குமார், அங்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, காவல் நிலையப் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவியிடம், தான் பாதுகாப்பு பணிக்குச் செல்வதால் கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார். சிரஞ்சீவி, உடனே ஆயுத அறையில் இருந்து துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கான பதிவேட்டை சதீஷ்குமாரிடம் வழங்கியுள்ளார். சதீஷ்குமார், அதில் கையெழுத்திட்டு, ஆயுத அறையில் உள்ள பெட்டியில் இருந்த 9 எம்.எம். கைத்துப்பாக்கியை தோட்டாவுடன் எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த சதீஷ்குமார், சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது சிரஞ்சீவி அவரிடம், வெளியே செல்லவில்லையா என்று கேட்டாராம். அதற்கு பதில் கூற திரும்பிய சதீஷ்குமார், தான் வைத்திருந்த துப்பாக்கியை சிரஞ்சீவி நெற்றியில் வைத்து அழுத்தினாராம். அதிர்ச்சியடைந்த சிரஞ்சீவி, 'சார் விளையாடாதீங்க' என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து காவல் நிலைய வாயில் பகுதிக்கு வந்த சதீஷ்குமார், தலையின் வலதுபுறம் காதுக்கு மேல் துப்பாக்கியை வைத்து தனக்குத் தானே சுட்டுக் கொண்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீஸார் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காவல் ஆணையர் ஆய்வு: இதுகுறித்து தகவலறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன், கூடுதல் ஆணையர் எச்.எம்.ஜெயராம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சதீஷ்குமார் சடலம் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. பிரேத பரிசோதனையை அடுத்து சதீஷ்குமார் சடலம் புதன்கிழமை பிற்பகலில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கேமரா காட்சிகள்: சதீஷ்குமார் தற்கொலை சம்பவம் குறித்து அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சதீஷ்குமார், மேஜையில் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் அதை படித்தபோது, 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, எவ்வித காரணமும் இல்லை' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த காவல் நிலையத்தில் உள்ள கேமராவில், சதீஷ்குமார் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும், அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் பதிவாகியிருந்தன. அதை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

குடும்பப் பிரச்னை இல்லை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையை அடுத்து சதீஷ்குமார் சடலத்தை வாங்க வந்த அவரது தந்தை ராஜாராம் நிருபர்களிடம் கூறியது:

எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்னையும் கிடையாது. திங்கள்கிழமை இரவு 11 மணி வரை சதீஷ்குமார் எங்களுடன் செல்லிடப்பேசியில் பேசினார். அதன் பின்னர்தான் ஏதோ நடந்துள்ளது. சதீஷ்குமார் எதற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்றார்.

சதீஷ்குமாருக்கு, அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்து வந்தனர். இந்நிலையில் சதீஷ்குமார் தற்கொலை குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் தோல்வியா?: சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள், துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், அவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதில் ஏதேனும் நெருக்கடிக்கு அவர் ஆளானாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே வாரத்தில் 2-ஆவது சம்பவம்: மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சென்னை ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் கடந்த 4-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துக் கொண்டார். இந்நிலையில் இதே வாரத்தில் இரண்டாவது சம்பவமாக உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தற்கொலை செய்துக் கொண்டது காவல்துறை அதிகாரிகளையும், காவலர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரௌடிகளை கட்டுப்படுத்தியவர்
அயனாவரம் பகுதியில் ரௌடிகளைக் கட்டுப்படுத்தும் வகையில், தற்கொலை செய்துக் கொண்ட காவல் உதவி சதீஷ்குமார் செயல்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இறந்த சதீஷ்குமாருக்கு கணேஷ்குமார், செல்வக்குமார் என இரு சகோதரர்கள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ்குமார், சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வருகிறார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக காவல்துறை பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். பயிற்சி முடிவடைந்ததும், ஆயுதப் படையில் சிறிது காலம் உதவி ஆய்வாளராகவும், அதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சிறிது காலம் உதவி ஆய்வாளராகவும் இருந்துள்ளார்.

2014-இல் அயனாவரம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டபோது, ரௌடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனி ஆளாகச் சென்று குற்றவாளிகளைக் கைது செய்துள்ளார். இதனால் இப்பகுதியில் ரெளடிகளின் தொல்லை குறைந்திருந்தது என்கின்றனர் அயனாவரம் பகுதியினர். 

காவலர்களுக்கு மனநல ஆலோசனை
சென்னையில் போலீஸார் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை தடுப்பதற்காக மனநல ஆலோசனை வழங்கும்படி காவல்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பணிச்சுமையின் காரணமாகவும், மன அழுத்ததின் காரணமாகவும் காவலர்களும், கீழ் நிலை அதிகாரிகளும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெறுகின்றன. 
இதில் கடந்த 4-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதையடுத்து சென்னையில் ஆயுதப்படை காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அப் பிரிவின் துணை ஆணையர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் காவல்துறை அதிகாரிகளை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால், அனைத்துப் பிரிவு போலீஸாருக்கும் மனநல ஆலோசனை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை காவல்துறை நிர்வாகம் எடுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT