தமிழ்நாடு

பணமோசடி வழக்கு: முன்னாள் அமைச்சரிடம் போலீஸார் 6 மணி நேரம் விசாரணை

DIN

வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015 -ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 
இதற்கிடையே, சென்னை அம்பத்தூரை சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் கணேஷ் குமார் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு புகார் அளித்தார். 
அதில், 'அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதற்காக 16 பேரிடம் ரூ.95 லட்சம் பணம் பெற்று, அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியிடம் அளித்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் வேலை வாங்கித் தரவில்லை. மேலும் நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. இந்நிலையில் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் அதை திருப்பிக் கேட்கின்றனர். எனவே என்னை ஏமாற்றிய, செந்தில் பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்த புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 3 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்தனர். 
இந்த வழக்கில் போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்கு, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி கடந்த டிசம்பர் மாதம் முன்ஜாமீன் பெற்றார். இருப்பினும், இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை விதித்திருந்தது. 
இதையடுத்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார், விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு 3 முறை அழைப்பாணை அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராமல் இருந்து வந்தார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு 4 -ஆவது முறையாக செந்தில் பாலாஜிக்கு மத்தியக் குற்றப்பிரிவு அழைப்பாணை அனுப்பியது.
மத்தியக் குற்றப் பிரிவு விசாரணை: இதையடுத்து செந்தில் பாலாஜி, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜரானார். 
அவரிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் பிற்பகல் 1 மணி வரை விசாரணை செய்தனர். தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பின்னர் பிற்பகல் 2 மணிக்கு அவரிடம் விசாரணை தொடர்ந்தது. அவரிடம் பணம் மோசடி குறித்து பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு செந்தில் பாலாஜி அளித்த பதில்களைப் பதிவு செய்தனர். இந்த விசாரணை மாலை 5 மணி வரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT