தமிழ்நாடு

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

இந்தியக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியது:
இந்தியக் கடல் பகுதியில் இலங்கை, குமரிக்கடல் மற்றும் மாலத் தீவுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது செவ்வாய்க்கிழமை காலை மாலத் தீவுக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இது மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் லட்சத்தீவுகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு (மார்ச் 14, 15) மழை பெய்யும். 
அதேபோல், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும். தென்தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை கனமழை பெய்யக்கூடும். சென்னையில் பொதுவாக மேகமூட்டமாகக் காணப்படும்.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்: குமரிக்கடல் மற்றும் தெற்கு கேரளக் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்த பகுதிகளில், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலும், சிலவேளைகளில் 65 கி.மீ. வேகத்தில் கூட காற்று வீசக்கூடும். மீனவர்கள் தென் தமிழகக் கடலோர பகுதி, குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் லட்சத்தீவு நோக்கி நகர்வதால், லட்சத்தீவு பகுதிகளுக்கு 15-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றார் பாலச்சந்திரன்.
பாபநாசத்தில் 40 மி.மீ.: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 20 மி.மீ., பாம்பன், கமுதி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, தூத்துக்குடி, கோவில்பட்டி, சிவகாசி ஆகிய இடங்களில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT