தமிழ்நாடு

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடரும் அத்துமீறல்கள் 

கோ.ராஜன்

தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் அடுத்தடுத்து நடந்து வரும் அத்துமீறல் சம்பவங்களால் வனப் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையரண் சூழந்த தேனி மாவட்டம் 2,868 சதுர கி.மீ., பரப்பளவுடையது. இதில், 33.7 சதவீதம் வனப் பரப்பாகவும், 40.3 சதவீதம் விவசாய நிலப் பரப்பாகவும் உள்ளது.
தேனி மாவட்ட வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி வனப் பகுதியில், 600 சதுர கி.மீ., பரப்பளவுள்ள மேகமலை வனப் பகுதியை கடந்த 2012 -ஆம் ஆண்டு மேகமலை வன உயிரின சரணாலயமாக அரசு அறிவித்தது. மாவட்ட வன அலுவலர், மேகமலை வன உயிரின காப்பாளர் ஆகியோர் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட வனத் துறையில், மொத்தமுள்ள 204 பணியிடங்களில், 102 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மட்டுமின்றி பட்டா விவசாய நிலங்களும், தனியார் எஸ்டேட்களும் உள்ளன. ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வரும் வனப் பகுதி, கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து நடந்து வரும் அத்துமீறல் மற்றும் சமூக விரோத செயல்களால் பொலிவிழந்து வருகிறது. 
வருஷநாடு வனப் பகுதியில் காடுகள் அழிந்து வருவதால் மழையின்றி கடந்த 5 ஆண்டுகளாக மூல வைகை ஆறு தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேகமலை, இரவங்கலாறு வனப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு பொம்முராஜபுரம் பகுதியில் தனியார் எஸ்டேட்டிற்குச் செல்வதற்கு பாதை அமைக்க காப்புக்காட்டில் உள்ள 200 -க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகார்களின் அடிப்படையில், வனத்துறை பணியாளர்கள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விதிமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. மேகமலைப் பகுதியில் சிங்கவால் குரங்குகள் இனம் அழிக்கப்பட்டு வருவதாகவும், மூல வைகை நீர்பிடிப்பு பகுதியை சில தனியார் எஸ்டேட்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும், தைலப் புல் வளர்ப்புக்காக மலைப் பகுதியில் சிற்றோடைகளின் வழித் தடம் மாற்றப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக -கேரள எல்லையில் உள்ள கம்பம் மெட்டு வனப் பகுதியில் போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட காவல் துறையினர் ஒருங்கிணைந்த சோதனை நடத்தினர். இதில், கம்பம் மெட்டு தமிழக எல்லைக்கு உள்பட்ட மூங்கில் பள்ளம், மந்திச்சுனை வனப் பகுதியில் சாராய ஊறல்கள் மற்றும் கஞ்சா செடிகள் கண்டறிப்பட்டன. கேரளப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தும், இதுகுறித்து கேரள காவல் துறையில் புகார் அளிக்க தேனி மாவட்ட காவல் துறை மற்றும் வனத் துறை முன்வரவில்லை. 
இந்நிலையில், கம்பம்மெட்டு தமிழக எல்லைக்கு உள்பட்ட பகுதியை ஆக்கிரமித்து கேரள கலால் துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. தேனி மாவட்ட நிர்வாகத்தின் எதிர்ப்புக்குப் பின், கேரள அதிகாரிகள் சோதனைச் சாவடி ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டனர்.
வனப் பகுதிக்கு இடையே உள்ள மலைகிராம மக்கள் மற்றும் விவசாயிகளை பல்வேறு வகையில் கெடுபிடி செய்து வரும் வனத் துறையினர், வனப் பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் அக்கறை காட்டுவதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் புகார் இருந்து வருகிறது.
விதிமீறலால் காட்டுத் தீ ஏற்பட்டதா? : கடந்த 11 -ஆம் தேதி போடி அருகே குரங்கணி வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, மலையேற்றப் பயிற்சிக்கு சென்றிருந்த 16 பேர் உயிரிழந்தனர். குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு செல்வோர் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யவும், வனப் பகுதிக்குள் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்குச் செல்வதை தடை செய்யவும் வனத் துறையினர் முன்வருவதில்லை. இதுகுறித்து போடி பகுதியைச் சேர்ந்த வன ஆர்வலர்கள் சிலர் கூறியது: 
மாவட்டத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை காடுகளை சீர்திருத்தி விவசாய நிலமாக பண்படுத்துவதற்கும், மேய்ச்சல் தரிசு தளைப்பதற்கும் காடுகளில் தீ வைக்கப்பட்டது. மேலும், மரங்கள் வெட்டப்பட்ட தடயங்களை அழிப்பதற்கும் காடுகளில் தீ வைக்கப்பட்டது.
ஆனால், தற்போது பட்டா நிலங்களில் விவசாயம் செய்து வருபவர்களுக்கே வனத் துறையினரால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், காடுகளை சீர்திருத்த தீ வைக்கப்படும் சம்பவங்கள் நடைபெறுவதில்லை. மலைப் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்காததால் மேய்ச்சல் புல் மற்றும் கரி விறகுக்காக மலைப் பகுதியில் தீ வைக்கப்படுவதில்லை. 
இருப்பினும், வனப் பகுதியில் ஈஞ்சம்புல் மறு தளைவுக்காக தீ வைக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்கு, கடந்த 2012 -ஆம் ஆண்டு மலைப் பகுதியில் ஈஞ்சம் புல் அறுவடைக்கு மாவட்ட வனத் துறை தடை விதித்தது. ஆனால், தற்போது வரை மாவட்டத்துக்கு உள்பட்ட 6 வனச் சரகத்தில் இருந்தும் நாளொன்றுக்கு சுமார் 30 லாரி லோடு ஈஞ்சம் புல் அனுமதியின்றி அறுவடை செய்து கொண்டு செல்லப்படுகிறது. ஈஞ்சம் புல் மறு தளைவுக்காக வைக்கப்படும் தீ, வனப் பகுதியில் உள்ள கோரைப் புல் மற்றும் புல் புதர்களில் பரவி காட்டுத் தீயாக உருமாறுகிறது. குரங்கணி மலைப் பகுதியிலும் ஈஞ்சம் புல் மறு தளைவுக்காக தீ வைக்கப்பட்டு, அது காட்டுத் தீயாக மாறியிருக்கலாம் என்றனர் அவர்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பதற்கும், வனப் பகுதியில் நடைபெறும் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோத சம்பவங்களை தடுப்பதற்கும் வனத் துறையில் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும், கண்காணிப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கு நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும், மலையடிவார கிராம மக்களுக்கு தீ தடுப்பு மற்றும் வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT