தமிழ்நாடு

விதிகளை மீறிய சுற்றுலா நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: குரங்கணி சம்பவம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம்

DIN

குரங்கணி சம்பவத்தில் விதிகளை மீறிய சுற்றுலா நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தது தொடர்பாக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நேரமில்லாத நேரத்தில் எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் ஆகியன பிரச்னையை எழுப்பின. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் கே. ஆர். ராமசாமி ஆகியோர் பேசினர். 
இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில்:-ஈரோடு, திருப்பூர் பகுதியைச் சேர்நத 12 பேர் கொண்ட குழுவானது மலையேற்றத்துக்கு அங்கீகரிப்படாத கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத்தில் இருந்து கொட்டக்குடி காப்புகாடு வழியாக குரங்கணிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
இதேபோன்று, சென்னையில் இருந்து 27 பேர் கொண்ட மற்றொரு குழு வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் கொட்டக்குடி காப்புக்காடு வழியாக மலையேற்றத்தைத் தொடங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அன்றைய தேதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இந்தத் தீயானது வனத்துறையால் அணைக்கப்பட்டது.
தீ அணைக்கப்படவில்லை என்றால், இந்திய வனநில அளவை நிறுவனத்திடம் இருந்து தொடர் எச்சரிக்கை பெறப்பட்டிருக்கும். கடந்த பல நாள்களில் அந்தப் பகுதிகளில் தீ நிகழ்வு குறித்த எச்சரிக்கை எதுவும் அந்த நிறுவனத்திடமிருந்து பெறப்படவில்லை.
17 பேர் உயிரிழப்பு: தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் தொடங்கின. மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் துயர சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அனுமதியின்றி 12 பேரை காப்புக்காடு பகுதிக்குள் அழைத்துச் சென்றதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு விதி மீறல்கள் தொடர்பாக சென்னை மலையேற்ற சங்கம் மற்றும் ஈரோட்டில் உள்ள 'டூர்-டி-இந்தியா' ஆகிய நிறுவனங்களின் மீது காவல் துறையும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.
2 மாதங்களில் விசாரணை அறிக்கை: இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு மாதங்களில் அவர் தனது அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என தனது பதிலுரையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT