தமிழ்நாடு

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் 3 பேரின் நியமனம் செல்லும்: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேரின் நியமனம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உச்ச  நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சார்பில் மேல்முறையீட்டு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டத்தின்படி, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், பொருளாளர் கே.ஜி.சங்கர், கட்சியின் ஆதரவாளர் எஸ்.செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்த, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி 3 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகளின்படியும், அரசியல் சாசன சட்டத்தின்படியும் இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பதவிப் பிரமாணம் தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி, இந்த நியமனம் செல்லாது என்றும் இந்த 3 பேரை சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு அனுமதிக்க முடியாது என்றும் கடந்த ஆண்டு நவம்பரில் சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்ததாக பேரவைச் செயலாளர் உத்தரவிட்டார்.

வழக்குகள்: சட்டப்பேரவைச் செயலாளரின் இந்த உத்தரவை எதிர்த்து, நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேர் சார்பிலும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லாது என அறிவிக்கக் கோரி, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான லட்சுமி நாராயணன் வழக்குத் தொடுத்தார். ஆளுநருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக் கோரி எஸ்.தனலட்சுமி என்பவர் பொதுநல வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. அதில், "யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை, துணைநிலை ஆளுநருக்கு நியமன எம்.எல்.ஏ.க்களை தன்னிச்சையாக நியமிக்க அனைத்து விதமான அதிகாரங்களும் உள்ளன. குடியரசுத் தலைவர், துணைநிலை ஆளுநரை ஒரு நிர்வாகியாக நேரடியாக நியமிக்கிறார். இதனால், அசாதாரணச் சூழலில் சட்டப்பேரவையைக் கலைக்கக்கூட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் போது அவர் அமைச்சரவையின் கருத்துகளைக் கேட்க எந்தவிதமான கட்டாயமும் இல்லை. அதேபோன்று, இந்த நியமன எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சட்டப்பேரவைத் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

பேரவைத் தலைவரின் உத்தரவு ரத்து: எனவே, இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம்தான் முறையிட வேண்டும். இதனை எதிர்த்து பொதுநல வழக்குத் தொடுக்க முடியாது. இந்த எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என்பதால், இவர்களை பேரவைக்குள் அனுமதிக்க மறுத்து சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவர்களைப் பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும். இந்த நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

தீர்ப்பை எதிர்த்து, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமிநாராயணன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு, பேரவைத் தலைவரை கட்டுப்படுத்துமா, இல்லையா என்பது மேல்முறையீட்டின்போது தெரிந்துவிடும். இருப்பினும், மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் பேரவைக் கூட்டத்தொடரில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் அனுமதிப்பாரா அல்லது தனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது எனக் கூறி மறுப்பு தெரிவிப்பாரா என்பது போகப் போகத் தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT