தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை உலகத்தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழர்களின் கலை, பண்பாட்டு வரலாறை விளக்கும் வகையில் ரூ. 50 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
தமிழ் பண்பாட்டு தலைநகராகக் கருதப்படும் மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் அமைக்கப்படும் என அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். கடந்த 1985 ஆம் ஆண்டு அறிவித்தார். அதற்காக தல்லாகுளம் அரசு சட்டக்கல்லூரி அருகே 14.25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி ரூ. 25 கோடியில் உலகத் தமிழ்ச்சங்கம் கட்டப்பட்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சங்கத்துக்கு என ஒதுக்கப்பட்ட மொத்தம் 14.25 ஏக்கரில் தற்போது 4 ஏக்கரில் மட்டுமே உலகத்தமிழ் சங்கக் கட்டடம் உள்ளது.
உலக அளவிலான தமிழ்ச்சங்கங்களை ஒருங்கிணைத்தல், தமிழ் மொழி குறித்து சர்வதேச ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லுதல், தமிழர் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் ஆய்வரங்கம், கருத்தரங்குகள் நடத்துதல் ஆகிய பணிகளை மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் மூலம் செயல்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக தமிழர் கலை, பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்க தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியக முகப்பில் தமிழரின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஜல்லிக்கட்டு மற்றும் உழவுக் காளைகளின் சிலைகள் இடம் பெற உள்ளன. அதற்கடுத்ததாக ரூ.16 கோடி மதிப்பீட்டில் தமிழன்னை சிலையும் அமைக்கப்படவுள்ளது. இச்சிலையை ரோம் நகர சலவைக்கல்லில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் உள்ளே மொத்தம் 328 அம்சங்கள் அமையவுள்ளன.
தமிழ் இலக்கியம், தமிழர் வீரம், புகழ், பெருமை, பண்பாடு என வரிசைப்படுத்தப்பட்டு அருங்காட்சியக அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர் மற்றும் இளங்கோவடிகள் முதல் பாரதி படைப்புகள், நவீன இலக்கியவாதிகள் வரை அதில் இடம் பெறும் வகையில் அரங்குகள் அமையவுள்ளன.
புடைப்புச் சிற்பங்களாக கடையேழு வள்ளல்கள் சிற்பங்களும் இடம்பெற உள்ளன. தமிழ் இலக்கிய பெண்பாற்புலவர்கள் சிலைகளும் இடம் பெறுகின்றன. பெண்பாற் புலவர்களுக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டு, அதில் ஒளவையார் முதல் அனைத்து பெண்பாற்புலவர்களின் வரலாறு, படைப்புகள் இடம் பெறவுள்ளன.
அருங்காட்சியகத்தில் பழந்தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகள், பழைமையான அச்சு நூல்கள் உள்ளிட்ட தமிழ் ஆவணங்கள் பலவும் பாதுகாக்கப்படவுள்ளன.
அருங்காட்சியகம் அமைக்க தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பூம்புகார் நிறுவனம் அருங்காட்சியக கலைப் பொருள்களை அமைக்கவுள்ளது.
மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமையவுள்ள அருங்காட்சியகம் குறித்து சங்க இயக்குநர் கா.மு.சேகர் கூறியதாவது: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் அருங்காட்சியகம் அமைக்க மே 9-ஆம் தேதி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.50 கோடியில் ஓரிரு மாதங்களில் அருங்காட்சியகத்துக்கான கட்டடப் பணிகள் தொடங்கி மூன்றாண்டுகளில் நிறைவடையும் என்றார்.
தமிழுக்கென்று தனி அருங்காட்சியகம் இதுவரை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் இல்லாத நிலையில், மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் அந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுவதை தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.