முகப்பு
தமிழ்நாடு

ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 22 மே, 2018 at 3:57 AM
பகிர்:

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகம், மேற்கு தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (மே 24, 25 ) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்பம் அதிகரிப்பு: திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்து காணப்படும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருத்தணியில் 105 டிகிரி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அதிகபட்சமாக திங்கள்கிழமை 105 டிகிரி வெயில் பதிவானது. சென்னை, திருச்சி, வேலூரில் தலா 100 டிகிரி வெயில் பதிவானது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மீனவர்கள் புதன்கிழமை வரை (மே 23) தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.