‘கஜா’ புயல் 15-ம் தேதி கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் 14 ஆம் தேதி இரவில் இருந்தே மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில கனமழைக்கு வாய்ப்பு...
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15 ஆம் தேதி கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. தாய்லாந்து நாட்டு பரிந்துரைப்படி, இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 15 ஆம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புயல் எச்சரிக்கையையடுத்து தமிழகம் மற்றம் புதுச்சேரியில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது சென்னையில் 930 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல், வரும் 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) முற்பகல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.
நவம்பர் 15-இல் அநேக இடங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் 14 ஆம் தேதி இரவில் இருந்தே மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது பின்னர் மாறுபடலாம் என்று கூறினார்.
இந்நிலையில், கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை படையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.