தமிழ்நாடு

நிவாரணப் பணி: அரசின் நடவடிக்கைகளால் மக்களின் கோபம் அதிகரிப்பு: கட்சித் தலைவர்கள் கருத்து

DIN


கஜா புயல் நிவாரணப் பணிகளில் முறையாக ஈடுபடாமல் மக்களின் கோபத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் அதிமுக அரசு ஈடுபடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூறியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் எட்டு மாவட்டங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன. பெரும் பேரழிவைச் சந்தித்த மக்களுக்கு உதவி செய்யாமல் அதிமுக அரசு உள்ளது. அமைச்சர்களையும் ஆளும்கட்சி எம்எல்ஏக்களையும் பார்த்தாலே மக்கள் விரட்டுகிறார்கள். அதனால்தான் கார் பயணம் செல்லாமல், வான் பயணத்தைத் தேர்ந்தெடுத்தார் முதல்வர். விமானத்தில் வந்துவிட்டு ஹெலிகாப்டரில் சில ஊர்களுக்குச் சென்ற முதல்வர் அங்கிருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரமே காரில் பயணம் செய்துள்ளார். அங்கும் மக்களைச் சந்திக்காமல் குறிப்பிட்ட இடத்தில் சிலரை மட்டும் வரவழைத்து நிவாரணப் பொருள்களை வழங்கி உள்ளார். மக்களின் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாகவே இந்த அரசு அனைத்துக் காரியங்களையும் செய்கிறது. இதற்கு மக்கள் மன்றத்தில் நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஓடி ஒளிந்து கொள்வதால் அதிலிருந்து தப்ப முடியாது.
சு.திருநாவுக்கரசர் (காங்.): கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய - மாநில அரசுகளால் போதுமான நிவாரணப் பணிகள் சரியாக நடைபெறவில்லை. மத்திய அரசும், தமிழக அரசும் நிவாரண நிதி உதவியோ, நிவாரண உதவிகளையோ, அத்தியாவசியப் பொருள்களையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாகச் சென்றடையப் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 
மத்திய பாஜக அரசோ மத்திய பேரழிவு நிதியிலிருந்து நிதி ஒதுக்காமல் இருப்பதும், மத்திய அமைச்சர்களோ, அதிகாரிகளோ தமிழகத்தைப் புறக்கணிக்கும் விதத்தில் இதுவரை கண்டு கொள்ளாமலும், பார்வையிட வராமலும் இருப்பதும் பெரும் கண்டனத்திற்குரியது. தமிழக முதல்வர் போதுமான பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்காமல் இருப்பது வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது.
ராமதாஸ் (பாமக): கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிமுக அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக மோசமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் கோபத்துடன் போராட்டம் நடத்தும் இடங்களில் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டிய அமைச்சர்கள் தங்களின் அதிகாரத் தோரணையைக் காட்டியது தான் நிலைமையை மோசமாக்கியுள்ளது. 
மக்களின் கோபத்தைத் தணிக்கும் வகையில் பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது அரசு. இது மக்கள் கோபத்தைத் தணிக்கவில்லை. 
மாறாக மக்களின் கோபத்தை அதிகரித்திருக்கிறது என்பது தான் உண்மை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT