தமிழ்நாடு

கஜா புயலால் 31 லட்சம் தென்னை மரங்கள் அழிவு: நாற்றுகள் தயாரிக்க பண்ணைகள் அமைக்கப்படும்: வேளாண் பல்கலை. துணைவேந்தர் தகவல்

DIN


கஜா புயலால் சுமார் 31 லட்சம் தென்னை மரங்கள் அழிந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாகவும், இதை ஈடு செய்ய டெல்டா மாவட்டங்களில் தென்னை நாற்றுப் பண்ணைகள் அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் சுமார் 31 லட்சம் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. வேருடன் சாய்ந்த மரங்களை மறுநடவு செய்ய முடியுமா என்று பலரும் கேட்டு வருகின்றனர். அதற்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம் அனைத்து மரங்களையும் மறுநடவு செய்ய முடியாது. சாய்ந்துள்ள பெரும்பாலான மரங்கள் 40 முதல் 50 வயது வரை உடையவை என்று கூறப்படுகின்றன. பொதுவாக 3 முதல் 5 வயதுடைய மரங்களாக இருந்தால் அவற்றை மீண்டும் நட்டு வளர்க்க முடியும்.
இருப்பினும் விழுந்துள்ள மரங்களின் எண்ணிக்கை, அதற்கான செலவு ஆகியவற்றையும், மரங்களை தூக்கி நிறுத்துவதற்குத் தேவையான இயந்திரங்கள், ஆள்கள் உள்ளிட்ட வசதிகளையும் கருத்தில் கொள்ளும்போது அதற்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது. இருப்பினும் எத்தனை மரங்களை மறுநடவு செய்ய முடியும் என்பது குறித்து ஆய்வுக்குப் பிறகு அறிவிக்க உள்ளோம். 
டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரங்கள் எத்தனை என்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு தொலையுணர்தல் (ரிமோட் சென்ஸிங்) துறையில் நிபுணத்துவம் கொண்ட 3 பேர் அடங்கிய குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களின் ஆய்வுக்குப் பிறகே எத்தனை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற சரியான விவரம் கிடைக்கும். 
அதேபோல், முறிந்து விழுந்த மரங்களுக்குப் பதிலாக புதிய தென்னை நாற்றுகளை வழங்குவதற்கும் போதுமான அளவுக்கு நாற்று கையிருப்பில் இல்லை. தஞ்சை மாவட்டம், வேப்பங்குளம், கோவை மாவட்டம் ஆழியாறு ஆகிய இடங்களில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையங்களில் அதிகபட்சமாக ஆண்டுக்கு 10 ஆயிரம் தென்னை நாற்றுகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். தற்போது இந்த மையங்களில் 2 ஆயிரம் நாற்றுகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. இவற்றை விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
அதேநேரம், கர்நாடக மாநிலத்தில் அதிகப்படியான அளவில் நாற்று உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படாமல் ஒரு வயது முதல் 2 வயதுடைய சுமார் 5 லட்சம் தென்னை நாற்றுகள் இருப்பதாக அறிகிறோம். எனவே இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் கர்நாடக அரசைத் தொடர்பு கொண்டால் அவர்களிடம் உள்ள நாற்றுகளை வாங்கி நமது விவசாயிகளுக்கு விநியோகம் செய்யலாம்.
குறைந்தபட்சம் 25 லட்சம் தென்னை மரங்களாவது விழுந்திருக்கும் என்று வைத்துக் கொண்டாலும் இந்த அளவுக்கு நாற்று உற்பத்தி செய்வதற்கு நமக்கு சுமார் 40 லட்சம் முற்றிய தேங்காய் விதைகள் தேவைப்படும். இவற்றை முளைக்க வைப்பதற்கு குறைந்தது ஓராண்டாகும். அதிலும் முளைப்புத் திறன் 60 முதல் 70 சதவீதம் வரைதான் இருக்கும். அப்படியும் வழங்கப்படும் நாற்றுகள் அனைத்தும் விவசாயிகள் விரும்பும் ரகங்களாகவே இருக்க முடியாது. 
இதனால் தரமான விதைக்காக கேரள மாநிலத்தில் உள்ள தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி மையத்தை அணுக உள்ளோம். மேலும், டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் 6 இடங்களில் உள்ளன. இவற்றில் சரியான இடங்களைத் தேர்வு செய்து தென்னை நாற்றுப் பண்ணைகள் (நர்சரி) அமைக்க உள்ளோம்.
குறைந்த ஆழத்தில் நாற்றுகளை நட்டதால்தான் தற்போது தென்னை மரங்கள் சாய்ந்து சேதம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இனி புதிதாக நடவுள்ள நாற்றுகளை பொக்லைன் மூலம் சுமார் 3 அடி ஆழ குழி தோண்டி அதில் ஒன்றரை அடி ஆழத்துக்கு அடியுரம், மண்ணைக் கொண்டு நிரப்பி, அதில் நாற்று நட வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்த உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT