தமிழ்நாடு

தமிழ் பேசுவோரின் எண்ணிக்கையை உயர்த்த 1000 இடங்களில் தமிழ் வளர் மையங்கள்: தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்

DIN


தமிழ் பேசுவோரின் எண்ணிக்கையை உயர்த்த அடுத்த சில ஆண்டுகளில் வெளிநாடுகளில் ஆயிரம் இடங்களில் தமிழ் வளர் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.
உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்க் கூடல் நிகழ்வு தொடக்க விழாவில் அவர் பேசியது: 
உலகளவில் உள்ள 6,500 மொழிகளில் ஏறத்தாழ 3 ஆயிரம் மொழிகள் அழிந்துவிட்டன. அந்த நிலை தமிழுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், அதிகம் பேர் பேசக் கூடிய மொழியாக தமிழை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலக அளவில் பண்பாட்டு ரீதியாக ஒருங்கிணைக்கக் கூடியதாக தமிழ் இனம் இருக்கிறது. ஆகவே, திட்டங்களை சரியான பாதையில் கொண்டு செல்லும்போது மொழி வளர்ச்சி சாத்தியமாகும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ச் சங்கம் என பல்வேறு கட்டமைப்புகளையும் ஒருங்கிணைத்து மொழி வளர்ச்சிக்கான பணிகளை தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது. 
இதன் ஒரு பகுதியாகவே தமிழ் வளர் மையங்கள் தொடங்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் ஹிந்தி பேசுவோரின் எண்ணிக்கை 25 கோடியில் இருந்து 55 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஹிந்தி பிரசார சபையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அந்த அடிப்படையில் தமிழ் வளர் மையங்கள் 26 நாடுகளில் தொடங்கப்பட்டு இணைய வழியில் 18 ஆயிரம் பேர் தமிழ் கற்று வருகின்றனர். அமெரிக்க கல்வி நிறுவனங்களில் தாய்மொழியுடன், இரண்டாவது வேறொரு மொழி கற்பவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் அளிக்கப்படுகிறது. அங்கு 2 மாநிலங்களில் தமிழ் 2-ஆவது மொழியாக கற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அமெரிக்காவில் மட்டும் 500 இடங்களில் தமிழ் வளர் மையங்கள் அமைக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல, ஒவ்வொரு நாட்டுக்கும் தனி வியூகம் அமைத்து, அங்குள்ள தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து அடுத்த சில ஆண்டுகளில் 1,000 தமிழ் வளர் மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக அடுத்த 6 ஆண்டுகளில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை 20 கோடியாக உயர்த்த முடியும்.
இணைய வழி தமிழ் பயன்பாட்டில் சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளைக்காட்டிலும் நாம் பின்தங்கி இருக்கிறோம். இணைய வழி தமிழ் பயன்பாடு அதிகரித்துவிட்டால், இதுபோன்ற கருத்தரங்குகள் சுலபமாக உலகத் தமிழர்களைச் சென்றடைந்துவிடும்.
அதேநேரம், உலகத் தமிழர்கள் பேச விரும்பும் கருத்துகளை தமிழ்கூடல் நிகழ்வுகள் விவாதிக்க வேண்டும். அதோடு நமது இளைஞர்கள் எத்தகைய விஷயங்களை விரும்புகிறார்கள் அது எந்த துறையாக இருந்தாலும் அதை தமிழில் விவாதிக்க தமிழ்க் கூடல் வழிவகை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமாக இளம் தலைமுறையிடம் மேலும் மொழி ஆர்வத்தை அதிகப்படுத்த முடியும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், உலக தமிழ்ச் சங்க இயக்குநர் (பொறுப்பு) க.பசும்பொன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி செயலர் சி.மணிவளன், ஆயிர வைசியர் கல்லூரி முதல்வர் மு.அருணகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT