தமிழ்நாடு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

DIN


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான, பல்வேறு நாடுகளிலுள்ள ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதற்கு கார்த்தி சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொத்துகள் முடக்கம்: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ், கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கி, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அதன்படி, கொடைக்கானல் மற்றும் ஊட்டியிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் பங்களா, கார்த்தி மற்றும் அவரது தாயாருக்குச் சொந்தமான, தெற்கு தில்லியிலுள்ள ரூ.16 கோடி மதிப்பிலான வீடு மற்றும் நிலம் ஆகிய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், இங்கிலாந்தில் உள்ள ரூ.8.67 கோடி மதிப்பிலான காட்டேஜ், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனத்தின் பெயரில் சோமர்செட்டிலுள்ள வீடு, ஸ்பெயின் மற்றும் பார்சிலோனாவிலுள்ள ரூ.14.57 கோடி மதிப்பிலான டென்னிஸ் கிளப் ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளன.
சென்னையிலுள்ள ஒரு வங்கியில், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனத்தின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ.90 லட்சம் பணமும் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.54 கோடி ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி கண்டனம்: தனது சொத்துகள் முடக்கப்பட்டது குறித்து, கார்த்தி சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டதாவது:
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையானது விதிமுறைகளை மீறியதாகும். சட்டத்துக்குப் புறம்பான முறையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அனுமானத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை சட்டப்பூர்வ ரீதியில் அணுக உள்ளதாக அவர் தெரிவித்தார். 
பங்குதாரர் அல்ல: இந்த விவகாரம் குறித்து, கார்த்தி சிதம்பரத்தின் வழக்குரைஞர், கார்த்திக்குச் சொந்தமான நிறுவனம் என்று கூறப்படும் நிறுவனத்துக்கும், அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த நிறுவனத்தில் அவர் பங்குதாரரும் இல்லை; இயக்குநரும் இல்லை. இந்த விவகாரம் குறித்து முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
வழக்கு விவரங்கள்: கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, தொழிலதிபர்கள் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதி இல்லாமல் ரூ.305 கோடி நிதியை வெளிநாட்டிலிருந்து பெற்றதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் இருந்து அந்நிறுவனம் தப்பிக்க, கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இதற்குக் கைமாறாக கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு, குறிப்பிட்ட தொகை லஞ்சமாகப் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT