தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா: அக். 19-இல் தொடக்கம்

DIN


தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கி இரு நாட்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சதய விழாக் குழுத் தலைவர் துரை. திருஞானம் தெரிவித்தது:
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராசராச சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1033-வது சதய விழா அக். 19-ம் தேதி தொடங்குகிறது. ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் துறைத் தலைவர் எஸ். ராஜவேல், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி உதவிப் பேராசிரியர் வி. சிவசாமி தொடக்கவுரையாற்றுகின்றனர்.
பின்னர், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன் தலைமையில் கருத்தரங்கம், மாலையில் திருமுறைப் பண்ணிசை, திருமுறை அரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ.ப. நல்லசிவத்தின் சிறப்பு இசைச் சொற்பொழிவு, செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள், இரவு ஷஷங்க் சுப்பிரமணியம் குழுவினரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
சதய நட்சத்திர நாளான அக். 20-ம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும், திருமுறைத் திருவீதி உலா, பெருவுடையார் - பெரியநாயகிக்கு 48 வகையான பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு, மாலையில் வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாலை 6 மணியளவில் பெருவுடையார் - பெரியநாயகி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெறவுள்ளது. இந்த வீதியுலாவில் மாமன்னர் ராஜராஜசோழன், பட்டத்தரசி லோகமாதேவி திருமேனிகளும் இடம்பெறுகின்றன.
இரவில் நடைபெறும் மேடை நிகழ்ச்சியில் குழந்தைகள் நல மருத்துவர் எஸ். சிங்காரவேலு, செ. ராமனாதனுக்கு மாமன்னன் ராசராசன் விருது வழங்கப்படவுள்ளது என்றார் திருஞானம்.
பின்னர், அவர் சதய விழா அழைப்பிதழை வெளியிட, அவற்றைப் பொதுமக்கள் பெற்றுக்கொண்டனர்.
இதில், மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர். காந்தி, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா பான்ஸ்லே, கோயில் செயல் அலுவலர் த. அரவிந்தன், அதிமுக பகுதிச் செயலர்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூர்த்தி, எஸ். ரமேஷ், எஸ். சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT